ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் இந்தியாவிற்கு வருகை தந்தபடி உள்ளனர். அப்படி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கள் சுற்றித் திரியும் இடங்கள் மற்றும் அங்கே பார்க்கும் மக்கள் தொடர்பான வீடியோக்களை யூடியூப் அல்லது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர். வேறு நாடுகளில் இருந்து இந்தியா வரும்போது இங்குள்ள பழக்க வழக்கங்கள், உணவு உள்ளிட்ட பல விஷயங்கள் மாறுதலாக இருக்கும் போது அதில் சில அவர்களுக்கு ஒரு சுவாரசியத்தை ஏற்படுத்தும்.
ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து வருகிறார்கள் என்பதற்காக இந்தியாவில் உள்ளவர்கள் அவர்கள் விற்கும் பொருட்களின் விலையை இரு மடங்காக அல்லது மூன்று மடங்காக உயர்த்தி சொல்லி மோசடியில் ஈடுபடுவது நம் அதிகம் கவனித்திருப்போம். வெளிநாட்டில் இருந்த வருகிறார்கள் என்றால் அவர்களிடம் பணம் நிறைய இருக்கும் என்ற வழியில் அதனை எப்படியாவது சொந்தமாக்குவதற்கு பத்து ரூபாய் பொருட்களை ஆயிரம் ரூபாய் வரைக்கும் விற்க தயாராக இருப்பார்கள்.
இப்படி ஒரு மனசா..
ஆனால் சமீபத்தில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணி ஒருவர், இந்தியாவில் உள்ள வியாபாரியை பார்த்து ‘இந்தியாவின் நேர்மையான வியாபாரி’ என குறிப்பிடதுடன் அவர் பேசிய விஷயங்கள் தற்போது பலரையும் மனம் கவர்ந்துள்ளது. Hugh Abroad என்ற பெயரில் உள்ள இன்ஸ்டாகிராம் பயனர் ஒருவர் சமீப காலமாக இந்தியாவில் அதிகம் சுற்றி திரிந்து வருகிறார்.
இவர் ஹைதராபாத்தில் சென்றிருந்த போது அங்கே தெருவோரம் முத்து மாலை வியாபாரம் செய்யும் ஒரு நபரை கவனித்துள்ளார். அவரிடம் பேச்சை கொடுத்த போது அது உண்மையான முத்தா என கேட்கிறார். அதற்கு இல்லை என நேர்மையாக பதிலளித்துள்ளார் அந்த வியாபாரி. இது பிளாஸ்டிக்கால் செய்யப்பட்டது என்றாலும் நெருப்பால் சுட்டாலும் எதுவும் ஆகாது என்றும் நேர்மையாக அந்த நபர் குறிப்பிட்டதுடன் ஆங்கிலத்தில் சரளமாக பேசியுள்ளார்.
சபாஷ் போட வைத்த மனசு
மேலும் முத்து மாலையின் விலை வெறும் 150 என கூறிய நேர்மையும் அந்த வெளிநாட்டு பயணியை ஈர்த்திருந்தது. இதுவரையிலும் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்த அந்த தெரு வியாபாரி, தான் ஸ்காட்லாந்தில் இருந்து வந்ததாக சுற்றுலா பயணி தெரிவித்ததும் பிரெஞ்சு மொழி பேச ஆரம்பிக்கிறார். இந்தியாவில் தெருவோரம் சிறிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி, ஆங்கிலத்தில் பேசுவதே வியப்பாக இருக்கும் பட்சத்தில் அவர் பிரெஞ்சு மொழியை சரளமாக பேசியதும் மெய்சிலிர்க்க வைத்திருந்தது.
மற்றவர்களைப் போல வெளிநாட்டில் இருந்து வருபவர்களை ஏமாற்ற நினைக்காமல் அவர்களுக்கான விலையை சரியாக சொன்ன இந்த வியாபாரியை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்த வீடியோவில் அவர் வெவ்வேறு பாஷை பேசுவதும் பலரை ஈர்த்து வருகிறது.