மும்பையில் ஒரு வாலிபர் தாலி கட்டிய மனைவியை கடத்தியதாகவும், அவருடன் இருந்த மாமியாரை அடித்து கீழே தள்ளியதாகவும் வெளியான செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
மும்பையை சேர்ந்த வைபவ் என்பவர் காதலித்து ஒரு பெண்ணை திருமணம் செய்திருந்தார். அந்த பெண்ணுக்கு 19 வயதே ஆகிறது. கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில், கோபித்த மனைவி தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனை தொடர்ந்து, தனது மனைவியை நண்பர்களின் உதவியால் கடத்தி வீட்டிற்கு அழைத்துவர முடிவு செய்த வைபவ், மனைவியும் அவரது தாயாரும் சாலையில் நடந்து சென்ற போது, திடீரென காரில் வந்து மனைவியை வலுக்கட்டாயமாக காருக்குள் திணித்தார். அவருடன் இருந்த நண்பர்களும் இதில் ஈடுபட்டனர்.
இதனை தடுக்க முயன்ற மாமியாரை அடித்து கீழே தள்ளிவிட்டனர். மாமியாரும் போராடி தனது மகளை மீட்க முயன்றபோதும் முடியாததால் கீழே விழுந்து அழுது புலம்பினார். இந்த கடத்தல் சம்பவத்தில் அவர்கள் பெண்ணை மட்டும் கடத்திக்கொண்டு வேகமாக சென்றுவிட்டனர்.
சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சி வைரலானதை தொடர்ந்து, காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். கடத்திச் சென்ற கார் ஷிர்டி பேருந்து நிலையம் அருகே இருப்பதை கண்டுபிடித்த போலீசார், மனைவியை மீட்டு தாயாரிடம் ஒப்படைத்தனர். மேலும், கணவர் வைபவ் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து, அவருடைய நண்பர்கள் தலைமறைவாக இருப்பதாகவும், அவர்களை தேடும் பணிகளில் போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலி கட்டிய மனைவியை நண்பர்கள் உதவியுடன் கடத்திய கணவர், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
