தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பல இடங்களில் போலியான வெடிகுண்டு மிரட்டல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்திலும் நேற்று ஒரு போலி வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருவனந்தபுரம் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த மின்னஞ்சலில், “அலுவலகத்தின் உள்ள ஒரு மறைவிடத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது; இன்னும் சில நிமிடங்களில் வெடிக்கும்” என்று கூறப்பட்டிருந்தது. இதனை அடுத்து, காவல்துறை அதிகாரிகள் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் உதவியுடன் அலுவலகம் முழுவதும் சோதனை நடத்தினர்.
சோதனை முடிவில், வெடிகுண்டு எதுவும் இல்லை என்பது உறுதியாகத் தெரிய வந்தது. ஆனால், அப்போது திடீரென ஒரு தேன் கூடு கலைந்து ஆயிரக்கணக்கான தேனீக்கள் அங்கிருந்த அதிகாரிகள், வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் வேடிக்கை பார்த்த மக்களை கடிக்கத் தொடங்கின.
இந்த துரதிஷ்டமான சம்பவத்தில் 70 பேர் வரை காயமடைந்தனர். அவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் சிலருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, அனைவரும் குணமடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானது என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மின்னஞ்சல் அனுப்பிய நபரை கண்டுபிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.