நமது வாழ்க்கையில் நிறைய இன்னல்களையும், பிரச்சனைகளையும் நாம் சந்திக்கும் போது இந்த உலகத்தில் நம்மை விட கஷ்டப்படும் நபர் ஒருவர் இருப்பாரா என தோன்றும் அளவுக்கு ஒரு விரக்தி உருவாகும். ஆனால் சில நேரத்தில் ஒரு சிலர் படும் கஷ்டங்களையும் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் வாழ்வில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என ஓடிக்கொண்டிருக்கும் போதும் இதற்கு நமது வாழ்க்கையே பரவாயில்லை என்று தோன்றும் அளவுக்கு நிறைய சம்பவங்கள் நம்மைச் சுற்றி நடைபெறும்.
அந்த வகையில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரது வாழ்க்கை தொடர்பான வீடியோ ஒன்று தற்போது பலருக்கும் இன்ஸ்பிரேஷனாக அமைந்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட் பகுதியில் கடந்த ஒரு மாதமாக சொமாட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி செய்யும் பெண் ஊழியர் அதிக கவனத்தை ஈர்த்துள்ளார். உணவு டெலிவரி ஊழியராக பெண் இருப்பதில் என்ன இருக்கிறது என்று தோன்றலாம்.
சவாலான பணி
ஆனால் அவரது ஒரு சில வயதே ஆன மகனுடன் அவர் சாலையில் எந்த நேரமும் மிக துரிதமாக உணவு டெலிவரி செய்து வருவது தான் தற்போது கவனத்தை பெற்று வருகிறது. இது தொடர்பாக அந்த பெண் சமீபத்தில் ஒரு வீடியோவில் பேசி இருந்த தகவலின் படி, ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்துவிட்டு அந்த பெண் பல இடங்களில் வேலை தேடி அலைந்ததாக கூறப்படுகிறது.
ஆனால் அவருக்கு மகன் இருப்பதால் யாரும் வேலை கொடுக்க முன்வரவில்லை என்றும் தகவல்கள் கூறுகின்றது. மகன் இருக்கிறான் என்ற காரணத்தால் தனக்கு வேலை நிராகரிக்கப்பட்டு வருவதால் அதை நினைத்து பெரிதாக மனம் உடையாத அந்த பெண், நம்மிடம் பைக் இருக்கையில் ஏன் மகனை கொண்டு உணவு டெலிவரி செய்யும் வேலையை பார்க்கக்கூடாது என அவர் யோசித்துள்ளார்.
இன்ஸ்பயரிங் ஸ்டோரி
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக சொமாட்டோ நிறுவனத்தில் உணவு டெலிவரி ஊழியராக பணிக்கு சேர்ந்த அந்த பெண் ஆரம்பத்தில் நிறைய பிரச்சனைகளை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் எந்த வேலையாக இருந்தாலும் ஆரம்பத்தில் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும் என்றும் அதேபோல தனக்கும் அமைந்ததாகவும் குறிப்பிடும் அந்த பெண் தற்போது உணவு மகனுடன் உணவு டெலிவரி செய்வதில் எந்தவித சவால்களையும் சந்திப்பதில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகம் வைரலாகி வரும் நிலையில் பலரும் அந்த பெண்ணின் அர்ப்பணிப்பையும், கடின உழைப்பையும் பாராட்டி பலவிதமான கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். தனது வேலையையும், அதே நேரத்தில் தாய் பாசத்தையும் ஒரே நேரத்தில் சமநிலைப்படுத்தி ஓடிக்கொண்டே இருக்கும் இந்த பெண் நிச்சயம் சாதிக்க துடிக்கும் பலருக்கும் சிறந்த இன்ஸ்பிரேஷன் தான்.