ஒரு காலத்தில் குழந்தை பருவத்தில் தெருவோர கடைகளில் கிடைத்த கோலி சோடா இப்போது உலக சந்தையில் கெத்து காட்டுகிறது! அமெரிக்கா, பிரிட்டன், அரபு நாடுகள் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில், கோலி பாப் சோடா என்ற பெயரில், இந்தியாவின் பாரம்பரிய குளிர் பானம் பிரபலமடைந்து வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக பெப்சி, கோலா ஆதிக்கம் காரணமாக இந்திய சந்தையில் கோலி சோடா மறைந்துவிட்டதாக கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புத்தம் புது பொலிவுடன் ரீஎண்ட்ரி ஆகியுள்ளது. இந்திய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவில் கோலி சோடா வியாபாரம் சூடுபிடிக்கிறது.
Agricultural and Processed Food Products Export Development Authority தரவுகளின்படி, இந்த பானத்திற்கு அமெரிக்கா,பிரிட்டன், அரபு நாடுகள் மற்றும் ஐரோப்பியாவின் சில பகுதிகளில் நல்ல டிமாண்ட் உள்ளது. பழங்கால கோலி சோடா வடிவமைப்பை காப்பாற்றிக் கொண்டு, உலகத் தரத்திற்கு ஏற்ப புதுமையான அட்டைப்பெட்டி வடிவமைப்பு மற்றும் தரமான தயாரிப்புகளுடன் இது மீண்டும் அறிமுகமாகியுள்ளது.
உலகளாவிய சூப்பர் மார்க்கெட்களின் பிரம்மாண்ட கண்ணாடிப் பெட்டிகளில் இன்று கோலி சோடா இடம்பிடித்துள்ளது! குறிப்பாக, அரபு நாடுகளில் உள்ள லூலு மார்க்கெட் போன்ற பெரிய சில்லறை விற்பனை சந்தைகளில் இது மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது.
கோலி பாப் சோடாவின் வெற்றியின் காரணம், அதன் பழங்கால நினைவுகள் மட்டுமல்ல, புதியதாக உள்ளமைப்பு செய்யப்பட்ட பிராண்டிங் தான். பெயர், பாட்டில் வடிவம், கோலியின் ‘பாப்’ சத்தம் இவை அனைத்தும் மக்களிடம் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்குகின்றன.
லண்டனில் மார்ச் 17-19 வரை நடந்த International Food & Drink Event (IFE)-ல் APEDA மூலம் பிரமாண்டமாக கோலி சோடா அறிமுகப்படுத்தப்பட்டது. இது உலகளாவிய உணவு மற்றும் பான வியாபாரிகளுக்கு, இந்திய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தும் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்தது. பெரிய சர்வதேச பான நிறுவனங்கள் கூட, கோலி பாப் சோடா முன்னிலையில் நின்று பாராட்டின!
மசாலா சாய், இந்தியா ஃபில்டர் காபி போன்ற இந்திய பானங்கள் உலகமயமாகி வரும் நிலையில், கோலி பாப் சோடா இந்த புதிய டிரெண்டை முன்னணியில் கொண்டு செல்லும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.