75 முதலீட்டாளர்கள் ரிஜக்ட் செய்த புரொஜக்ட்.. இன்று வருடத்திற்கு ரூ.1,370 வருமானம்.. ராபிடோ உரிமையாளரின் வெற்றி பயணம்..!

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பவன் குண்டுபள்ளி என்ற இளைஞர், தனது ஐடியாவை செயல்படுத்த கிட்டத்தட்ட 75 முதலீட்டாளர்களை நாடினார். ஆனால், அனைவரும் அவருடைய திட்டத்தை நிராகரித்தனர். இறுதியில், ஒரு நிறுவனம் மட்டும் துணிந்து அவருக்காக…

rapido

தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்த பவன் குண்டுபள்ளி என்ற இளைஞர், தனது ஐடியாவை செயல்படுத்த கிட்டத்தட்ட 75 முதலீட்டாளர்களை நாடினார். ஆனால், அனைவரும் அவருடைய திட்டத்தை நிராகரித்தனர். இறுதியில், ஒரு நிறுவனம் மட்டும் துணிந்து அவருக்காக முதலீடு செய்தது. இன்று, இந்த நிறுவனம் ஆண்டுக்கு 1,370 கோடி ரூபாய் வருமானம் ஈட்டி வருகிறது. அந்த நிறுவனம் தான் ராபிடோ (Rapido).

பவன் குண்டுபள்ளி ஐஐடி ஜே.இ.இ. தேர்வில் தேர்ச்சி பெற்று ஐஐடி கான்பூரில் படித்தார். அதன் பின் சாம்சங் நிறுவனத்தில் வேலை செய்த நிலையில், தனது நண்பருடன் இணைந்து ஒரு லாஜிஸ்டிக் நிறுவனத்தை தொடங்கினார். ஆனால், அந்த நிறுவனம் நஷ்டமடைந்த நிலையில், நிறுவனத்தை மூடிவிட்டு, அதன் பிறகு ராபிடோ தொடங்கும் யோசனையை செயல்படுத்த முயற்சி செய்தார். ஆட்டோ மற்றும் டாக்ஸிகள் மிகவும் அதிகமான கட்டணங்களை பெற்று வரும் நிலையில், ஒரே ஒருவர் மட்டும் பயணம் செய்வதற்கு பைக் டாக்ஸியை நிறுவலாம் என்று அவர் முடிவு செய்தார்.

அவர் இதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கி, பல முதலீட்டாளர்களிடம் நிதி பெறுவதற்காக முயற்சி செய்தார். ஆனால், ஓலா (Ola) மற்றும் உபேர் (Uber) போன்ற பெரிய நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த நிறுவனம் தாக்குப்பிடிக்குமா என்ற சந்தேகம் இருந்ததால், 75 முதலீட்டாளர்கள் அவரது யோசனையை நிராகரித்தனர். அதன் பின்னர்தான், ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் தலைவர் பவன் முஞ்சால் இந்த ஐடியாவை ஏற்றுக்கொண்டார். “ஒரே ஒரு நபர் மட்டும் பயணம் செய்வதற்கு எதற்காக ஆட்டோ/டாக்ஸி பிடிக்க வேண்டும், பைக்கில் பயணம் செய்யலாமே” என்று அவர் பவன் குண்டுபள்ளியின் யோசனையை ஏற்றுக்கொண்டு முதலீடு செய்தார்.

இதனை அடுத்து, 2016 ஆம் ஆண்டு ராபிடோ நிறுவனம் அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் டயர் ஒன் (Tier 1) மற்றும் டயர் டூ (Tier 2) நகரங்களை மட்டும் இலக்காக கொண்டு செயல்பட்டது. தினசரி பயண பிரச்சனைகள் அதிகமாக இருந்தாலும், குறைந்த விலையில் பயணிகளுக்கு கட்டணத்தை அளித்தாலும், ஆரம்ப காலத்தில் பெரும் சவால்களை சந்தித்தது. அடிப்படை கட்டணம் 15 ரூபாய், ஒரு கிலோமீட்டருக்கு மூன்று ரூபாய் என்று மலிவாக இருந்த நிலையில்தான், கொஞ்சம் கொஞ்சமாக இந்த ஐடியா வெற்றியடைந்தது.

இன்று, இந்தியாவின் 100 நகரங்களுக்கு மேல் ராபிடோ செயல்பட்டு வருகிறது என்பதும், இந்நிறுவனத்திற்கு 50,000 ஓட்டுநர்கள் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்போது 6,700 கோடி ரூபாய் மதிப்புள்ள இந்த ராபிடோ நிறுவனம், ஆண்டுக்கு 1,370 கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகிறது என்பதும், இதன் முக்கிய முதலீட்டாளர்களில் ஒன்று ஸ்விக்கி (Swiggy) நிறுவனம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

75 முதலீட்டாளர்கள் தன்னுடைய ஐடியாவை நிராகரித்துவிட்டார்களே என்று சோர்ந்து போகாமல், தெலுங்கானா இளைஞர் பவன் குண்டுபள்ளி தொடர்ச்சியாக முயற்சி செய்ததன் விளைவு, இன்று இந்தியாவின் முன்னணி தொழில் அதிபராகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.