சைபர் கிரைம் குற்றவாளிகள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் நிலையில், அப்பாவி மக்களை குறிவைத்து, அவர்கள் லட்சக்கணக்கிலும் கோடிக்கணக்கிலும் மோசடி செய்து வருகின்றனர் என்பதை அன்றாடம் பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில், ஒடிசா மாநிலத்தின் முன்னாள் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரிடம் ரூ.1.4 கோடி மோசடி செய்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மற்றும் தற்போதைய எம்.எல்.ஏ துஷார் காந்தி பெஹ்ரா என்பவரிடம், டிரேடிங் அனாலிஸ்டுகள், பங்குசந்தை நிபுணர்கள் என்று நம்ப வைத்து, ஒரு கும்பல் அறிமுகமானது.
ஒரு குறிப்பிட்ட நிறுவனத்தில் முதலீடு செய்தால் பெரிய லாபம் கிடைக்கும் என்று பலரையும் மோசடி செய்த இந்த கும்பல், முன்னாள் அமைச்சர் துஷார் காந்தியிடமிருந்து ஆன்லைன் மூலமாக பணம் பெற்றுள்ளனர். “எங்கள் டிரேடிங் கணக்கை பயன்படுத்தி, ஐ.பி.ஓக்கள் மற்றும் பங்குகளில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும்” என்று கூற, அதனை நம்பிய அவர், ரூ.1.4 கோடி முதலீடு செய்தார்.
மொபைல் செயலி மூலம் முதலீடு செய்யப்பட்ட நிலையில், அதன் பிறகு தான் அது போலி என்பது தெரியவந்தது. இது குறித்து அவர் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்த நிலையில், போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த மோசடியில் கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, மேற்குவங்கம், டெல்லி, இமாச்சலப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் உள்ள வங்கி கணக்குகளுக்கு பணம் மாற்றப்பட்டதாக, முதல் கட்ட விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கும்பலில் இருந்து தற்போது ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களை சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்துள்ளது. அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், மற்ற குற்றவாளிகள் இருக்கும் இடம் பற்றிய தகவல் கிடைத்துள்ளதுடன், விரைவில் அவர்களையும் கைது செய்வோம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
இப்போது வரை குற்றவாளிகளிடமிருந்து வெறும் ரூ.4 லட்சம் மட்டுமே மீட்கப்பட்டுள்ளதுடன், அவர்களது வங்கி கணக்குகளில் இருக்கும் ரூ.15 லட்சம் முடக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த மோசடியில் உட்பட்ட அனைத்து குற்றவாளிகளும் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும், மொத்தமாக பணமும் மீட்கப்படும் என்றும் காவல்துறையினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.