பார்ட்டி என்று நேரடியாக அழைக்காமல், “திருமணம்” என்ற பெயரில் பார்ட்டிகள் நடைபெறுவதும், அதில் போலியான மணமகன், மணமகளை வைத்து திருமணம் நடத்துவது போன்ற தோற்றத்தை உருவாக்கி, டிக்கெட் விற்பனை செய்து சட்டவிரோதமாக பார்ட்டிகள் நடந்து வருவதாகவும், இதை ஆரம்பத்திலேயே அரசு கிள்ளி எறிய வேண்டும் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் சில மெட்ரோ நகரங்களில் இந்த போலி திருமணக் கொண்டாட்டங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், இதற்கான டிக்கெட்டுகள் ஆன்லைன் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. பிரமாண்டமாக நடத்தப்படும் இந்த பார்ட்டியில், உண்மையான திருமணம் போன்றே, போலியான முறையில் நடத்தப்படும் என்றும், இதில் கலந்து கொள்ள தனியாக வரும் பெண்களுக்கு ₹999, தனியாக வரும் ஆண்களுக்கு ₹1,499, தம்பதிகளாக வந்தால் ₹1,499 என டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இந்த டிக்கெட்டை வாங்கி இந்த போலியான திருமணத்தில் கலந்து கொள்பவர்களுக்கு ஆட்டம், பாட்டம், நடனம், மது, சாப்பாடு என பல வகைகளில் பரிமாறப்படும் என்றும், அதற்கு மேலும் சில விஷயங்கள் நடப்பதாகவும் கூறப்படுகிறது. கலாச்சார சீரழிவாக பார்க்கப்படும் இது போன்ற போலி திருமணக் கொண்டாட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், இதை தடுக்க கடுமையான சட்டம் இயற்ற வேண்டும் என்று கோரப்பட்டு வருகிறது. இது குறித்து சமூக வலைத்தளங்களிலும் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
வெளிநாடுகளில் இது போன்ற போலி திருமணப் பார்ட்டிகள் நடைபெறுவது சகஜமாக இருக்கும் நிலையில், இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் வந்துவிட்டது என்றும், அது உண்மையான திருமண நிகழ்ச்சிகளுக்கு எந்த விதமான மதிப்பும் மரியாதையும் இல்லாமல் செய்துவிடும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இதில் ஒரு கொடுமை என்னவென்றால், இந்த போலி திருமணத்திற்கு புரோகிதருக்கும் காசு கொடுத்து அழைத்து வரப்பட்டு, திருமணம் செய்து வைப்பது போன்ற நாடகம் நடத்தப்படுகிறது என்பதுதான் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே, மத்திய மாநில அரசுகள் இதை ஆரம்பத்திலேயே தடுத்து, இது போன்ற போலி திருமணப் பார்ட்டிகள் நடக்கும் இடங்களை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
