வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து, போலியாக இன்டர்வியூ நடத்தி, போலியான வேலைவாய்ப்பு அப்பாயின்மென்ட் ஆர்டரையும் வழங்கி வரும் ஒரு கும்பல் குறித்த புகார்கள் தற்போது அதிகமாக காவல் துறையில் பதிவு செய்யப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னணி நிறுவனங்களின் பெயர்களில் வேலைவாய்ப்பு விளம்பரங்களை சமூக வலைதளங்களில் முதலில் வெளியிடும் இந்த கும்பல், அதன் பிறகு அவர்களை தொடர்பு கொள்பவர்களிடம் ஆன்லைன் மூலம் இன்டர்வியூ நடத்துகிறது. அதன் பிறகு, “நீங்கள் வேலைக்கு தேர்வு செய்யப்பட்டுவிட்டீர்கள். உங்களுக்கான அப்பாயின்மென்ட் அனுப்பப்படும்” என்று கூறி, இமெயிலில் அப்பாயின்மென்ட் அனுப்பப்படுகிறது.
“நீங்கள் குறிப்பிட்ட தேதியில் அந்த நிறுவனத்தில் சென்று வேலையில் சேர்ந்துவிடலாம்” என்று அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு, டாக்குமெண்ட் சார்ஜ் என ரூ.10,000 பெறுகின்றனர்.
இதனை அடுத்து, குறிப்பிட்ட நாளில் அந்த நிறுவனத்தின் முன் அப்பாயின்மென்ட் ஆர்டருடன் நிற்கும் இளைஞர்களுக்கு தான் “நாம் ஏமாற்றப்பட்டுவிட்டோம்” என்பது மட்டும் தான் தெரிய வருகிறது. “அப்படி ஒரு இமெயில் நாங்கள் அனுப்பவில்லை; எங்கள் நிறுவனத்தில் வேலைவாய்ப்புக்கான ஆள் எடுக்கும் பணியும் நடைபெறவில்லை” என்று அந்த நிறுவனம் கூறிய பிறகுதான் இளைஞர்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.
எனவே, வேலையில்லாத இளைஞர்களை குறிவைத்து நடைபெறும் இந்த மோசடியில் இருந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், வேலை வாய்ப்பு குறித்த செய்தி வந்தால், அந்த நிறுவனத்திடம் இருந்து உண்மையிலேயே வந்திருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.