டெல்லி செங்கோட்டை குண்டு வெடிப்பு: பயங்கரவாதச் செயல் என மத்திய அரசு அறிவிப்பு

  டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தை பயங்கரவாதிகளின் செயல் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது,…

Dr Umar

 

டெல்லி செங்கோட்டையில் நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தை பயங்கரவாதிகளின் செயல் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சரவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது, இந்த தாக்குதல் குறித்த சில தகவல்களை தெரிவித்தார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை மிகவும் அவசரமாகவும் தொழில்முறையாகவும் தொடர வேண்டும் என்று அமைச்சரவை அறிவுறுத்தியதாகவும், குற்றவாளிகள், அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்தவர்கள், உதவியவர்கள் மற்றும் நிதி கொடுத்தவர்கள் நீதியின் முன் கொண்டு வரப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இந்த கொடூரமான கோழைத்தனமான செயலை அமைச்சரவை கண்டித்ததாகவும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் ஒழிப்பதில் இந்திய அரசு உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த மோசமான மற்றும் கோழைத்தனமான செயலை அமைச்சரவை சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாகவும், இது அப்பாவி உயிர்களை இழக்க வழி வகுத்ததாகவும், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் வெளிப்பாடுகளிலும் ஒழிக்க உறுதியாக இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி இந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கியதாகவும், அவர் மருத்துவமனைக்கு சென்று காயம் அடைந்தவர்களை சந்தித்ததாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பூடானில் இருந்து டெல்லிக்கு திரும்பியவுடன் பிரதமர் நேராக மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை சந்தித்து ஆறுதல் கூறியதாகவும், அவர்கள் விரைவாக வீடு திரும்ப பிரார்த்தனை செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்களிடம் அவர்களது நிலை குறித்துக் கேட்டறிந்தார்.

இந்த சம்பவம் குறித்து தடையவியல் வல்லுநர்கள் ஆய்வு செய்ததில், பெரிய அளவில் தடயங்கள் எதுவும் காணப்படவில்லை என்று உறுதி செய்துள்ளனர். ஆனால், அதே நேரத்தில், ஆய்வக பகுப்பாய்வுக்குப் பிறகு வெடித்த வெடிகுண்டு வகைகுறித்துத் தீர்மானிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், டாக்டர் உமர் நபியின் தாயிடமிருந்து டிஎன்ஏ மாதிரிகள் சேகரிக்கப்பட்டதாகவும், செங்கோட்டை அருகே வெடித்த காரை அவர் ஓட்டியதாகக் கூறப்படும் நிலையில், அது உறுதி செய்யப்படும் என்றும் கூறப்பட்டு வருகிறது.

தேசியப் புலனாய்வு அமைப்பு (NIA) இந்தக் குண்டு வெடிப்பை விசாரிக்க ஒரு பிரத்தியேகக் குழுவை உருவாக்கி உள்ளது என்றும், இந்த அணி விரிவான விசாரணையை நடத்தும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.