இந்தியாவின் முன்னணி உணவு டெலிவரி நிறுவனமான Zomato 600 வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேலை நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் சிறப்பாக செயல்படவில்லை என்று நிரூபிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், உண்மையில் AI உதவியுடன் கூடிய வாடிக்கையாளர் சேவை மையம் தொடங்கப்பட்டுவிட்டதால் மனித பணியாளர்களின் தேவை குறைந்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனால், வாடிக்கையாளர் சேவை மைய ஊழியர்கள் சுமார் 600 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தற்போது, வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு AI அடிப்படையிலான சேவை வழங்கப்படுவதால் இந்த வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எனினும், பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு மாற்று வேலை வழங்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அந்த உறுதி எவ்வளவு நிஜமாக இருக்கும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை என்றும் கூறப்படுகிறது.
வாடிக்கையாளர் சேவை மையம் AI ஆதரவுடன் செயல்படும் முறை அறிமுகமாகியுள்ளதால், நிறுவனத்தின் செலவு அதிகம் மிச்சமாகும் என அதன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வாடிக்கையாளர் சேவை மையம் என்ற துறை முழுமையாக அழியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது பணிபுரியும் ஊழியர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
AI தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக பாதிக்கப்படும் இன்னொரு துறையாக வாடிக்கையாளர் சேவை மையம் உருவாகியுள்ளது என்பது தற்போது மிகப் பெரிய விவாதமாக இருக்கிறது.