முன்பெல்லாம் நாம் ஒரு ஆட்டோவையோ அல்லது டாக்ஸியையோ அழைக்க வேண்டும் என்றால் மிக அரிதான ஆட்களே பல இடங்களில் இருப்பார்கள். ஆனால் இன்று சென்னை, பெங்களூர், கோயம்புத்தூர் உள்ளிட்ட பல்வேறு நகர பகுதிகளில் நிறைய தனியார் கேப் மற்றும் டாக்ஸிகளையும் செயலிகள் மூலம் நாம் புக் செய்து கொள்ளலாம் என்பதால் பயணத்தை எளிது ஆக்குவதற்கான வழிகளும் அதிகமாக இருக்கிறது.
ஆனால் அதே நிலையில் இது போன்ற தனியார் டாக்ஸி சேவையின் செயலிகள் மூலம் காரையோ, பைக்கையோ நாம் புக் செய்யும் போது இதில் நிறைய பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகளும் அதிகமாக உள்ளது.
உதாரணத்திற்கு நாம் ஒரு ஒரு இடத்தில் இருந்து காரை புக் செய்தால் சில டிரைவர்கள் வேண்டும் என்று அதனை ஏற்றுக் கொள்ளாமல் நிராகரித்துக் கொண்டே இருப்பார்கள். இதனால் குறிப்பிட்ட இடத்திற்கு நாம் செல்வதற்கு நேர தாமதம் ஆவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. இதே போல அதில் குறிப்பிடப்படும் கட்டணத்தை விட அதிக கட்டணத்தை சில டிரைவர்கள் கேட்பதன் பெயரிலும் நிறைய பிரச்சனைகள் உருவாவதை நாம் கவனித்திருப்போம்.
இப்படி கேப் சேவைகள் தொடர்பாக நிறைய செய்திகள் வரும்போது இணையத்தில் அவை வைரல் ஆகி வருவதையும் நாம் கவனித்திருப்போம். அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் இது தொடர்பாக ஒரு நபர் டாக்ஸி புக் செய்ய அதில் அவருக்கு வந்த மெசேஜ் மற்றும் டிரைவரின் பெயரை பார்த்து அந்த அந்த பயணத்தை அவர் கேன்சல் செய்து தொடர்பான செய்தி பலரையும் மிரண்டு பார்க்க வைத்துள்ளது.
இது தொடர்பாக தற்போது வைரலாகி வரும் ஸ்கிரீன்ஷாட்டின் படி அந்த கேப் ஓட்டுநர் பெயர் எமராஜா என தெரிகிறது. மேலும் அதில் அவருக்கு வந்த மெசேஜ் படி, ‘எமராஜா உங்களுடைய இடத்திற்கு வந்து உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்’ என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இந்த சம்பவம் நடந்ததாக தெரியும் நிலையில் எமராஜா என எமதர்மனின் பெயரை பார்த்ததும் அந்த நபர் உடனடியாக அந்த ட்ரிப்பை கேன்சல் செய்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.
பலரும் கட்டணம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக இது போன்ற கேப் பயணத்தை ரத்து செய்யும் நிலையில் ஓட்டுனரின் பெயருக்காகவே ஒரு வாடிக்கையாளர் ரத்து செய்துள்ள விஷயம் தற்போது பெரிய அளவில் இணையத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.