மகாராஷ்டிரா மாநிலத்தில் கல்லூரி படிப்பு முடிவடைந்து கடைசி நாளில் நடந்த விழாவில் பேசிக்கொண்டிருந்த 20 வயது மாணவி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று முன்தினம், மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தராசிவ் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில், படிப்பு முடிந்த பின்னரும் பிரிவு உபசார விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் வர்ஷா என்ற மாணவி பேசிக்கொண்டு இருந்தார்.
அவர் நகைச்சுவையாக பேசிக் கொண்டிருந்த போது, அவருடைய பேச்சைக் கேட்டு சக மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியாக சிரித்தனர். அப்போது திடீரென அவர் மயங்கி விழுந்தார். உடனடியாக சக மாணவ, மாணவிகள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து வர்ஷாவின் உறவினர்கள் கூறிய போது, வர்ஷாவுக்கு ஏற்கனவே இதய சம்பந்தமான நோய் இருந்ததாகவும், 7 ஆண்டுகளுக்கு முன் பைபாஸ் சர்ஜரி செய்யப்பட்டதாகவும், தினமும் மருந்துகளை உட்கொண்டு வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால், கல்லூரி பிரிவு உபசார விழாவில் கலந்து கொள்ள வேண்டியிருந்ததால், அவசரத்தில் மருந்து எடுத்துக் கொள்ளாமல் சென்றுவிட்டதாகவும் கூறியுள்ளனர்.
மேலும், வர்ஷா புத்திசாலி மாணவி என்றும், தனது வாழ்க்கைக்கும் குடும்பத்திற்கும் பெரிய கனவுகளை கண்டிருந்தார் என்றும் கூறப்படுகிறது. விவசாய வேலை செய்யும் பெற்றோரை நல்லபடியாக வைத்து காப்பாற்ற வேண்டும், தனது சகோதரி மற்றும் சகோதரனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்று அடிக்கடி கூறுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வர்ஷாவுக்கு ஏற்பட்ட திடீர் ஹார்ட் அட்டாக் தான் அவரது மரணத்திற்கு காரணம் என்று கூறப்படுவதால் மாணவ, மாணவிகள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
https://x.com/thefamilygyan/status/1908835132238156099