மத்தியப் பிரதேசத்தின் சிங்ரௌலி மாவட்டத்தில் ஒரு எருமையை மீட்க நடந்த ஒரு பரபரப்பான மீட்புப் பணி, அப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
மழையில் இருந்து தப்பிக்க ஒரு எருமை ஒரு வீட்டின் மாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடியில் சிக்கிக் கொண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சில மணிநேரங்களுக்கு பிறகு, கூரையில் இருந்து எருமையை மீட்க ஒரு ஹைட்ராலிக் கிரேன் வரவழைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
சிங்ரௌலி மாவட்டத்தில் உள்ள தாதர் கிராமத்தை சேர்ந்த ராம் சூரத் யாதவின் வீட்டின் மொட்டை மாடீயின் மீது ஏறி மழைக்காக தஞ்சம் அடைந்த எருமை, தானாகவே கீழே வர முடியாமல் தவித்தது. இதை அடுத்து, மீட்புப் பணி தொடங்கப்பட்டது.
கிடைத்த தகவல்களின்படி, தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால், கொட்டும் மழையில் இருந்து தப்பிக்கவே எருமை மாடிப்படிகளில் ஏறி மொட்டை மாடிக்கு சென்றிருக்கலாம். இருப்பினும், மொட்டை மாடியை அடைந்தவுடன், அது அங்கே சிக்கிக்கொண்டு கீழே இறங்க முடியவில்லை. எருமை கீழே இறங்க வழி தேடி போராடியதால் நிலைமை மேலும் மோசமடைந்தது.
எருமை மொட்டை மாடியில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்ற அச்சமும் கூடியது. பல மணிநேர முயற்சிக்கு பிறகு, உள்ளூர் மக்கள் ஹைட்ராலிக் கிரேனை வரவழைத்து, சிக்கித் வித்த எருமையைக் காப்பாற்ற முடிவு செய்தனர். எருமையை கூரையில் இருந்து பாதுகாப்பாகத் தூக்கி, மீண்டும் தரையில் இறக்க கிரேன் கவனமாக பயன்படுத்தப்பட்டது.
மீட்புப்பணிக்குப் பிறகு, இந்த சம்பவம் கிராம மக்கள் முகத்தில் புன்னகையையும், நிம்மதியையும் கொண்டு வந்தது. மீட்புப் பணியின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி, இணையவாசிகளிடமிருந்து பல்வேறு கருத்துகளை பெற்று வருகிறது.
https://x.com/narne_kumar06/status/1943602546745950442
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
