உலகின் மிகப்பெரிய ஏரோஸ்பேஸ் நிறுவனங்களில் ஒன்றான போயிங்கில் நிறுவனம் பெங்களூருவில் உள்ள அதன் Boeing India Engineering and Technology Center (BIETC)-ல் இருந்து 180 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஏரோஸ்பேஸ் முன்னணி நிறுவனமான போயிங், தற்போதைய பொருளாதார சிக்கல்களை சமாளிக்க பணியாளர்கள் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகவே இந்த வேலைநீக்க நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்தியாவில் 7,000 பணியாளர்கள் பணிபுரிந்து கொண்டிருக்கும் நிலையில் வேலைநீக்க ஊழியர்களின் எண்ணிக்கை ஒரு சிறிய பகுதி மட்டுமே என்றாலும் தற்போதைய சூழலில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போயிங் இந்தியா குழுமத்தில் பணியாற்றும் 7,000 பணியாளர்களில் பெரும்பாலும் பெங்களூரு மற்றும் சென்னை என்ஜினியரிங் மையங்களில் பணியாற்றி வருகின்றனர்.
போயிங் கோபரேட் தலைவர் மற்றும் உலகளாவிய நிர்வாகம் பொறுப்பு தலைவர் டாக்டர் பிரெண்டன் நெல்சன் இந்த வேலைநீக்க நடவடிக்கை குறித்து கூறுகையில்,
“நாங்கள் நிறுவனத்தின் செலவை குறைக்க முடிவு செய்துள்ளோம். அதன் ஒரு பகுதியாக, இந்தியாவில் 150–180 போயிங் பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளோம்,” என்று தெரிவித்தார்.
இந்தியாவில் பணிநீக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இந்தியா முக்கியமான திறன் சந்தையாகவே தொடரும் என்று நெல்சன் உறுதிப்படுத்தினார். மேலும், இந்த நடவடிக்கை வாடிக்கையாளர் சேவை, அரசு திட்டங்கள் மற்றும் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த செயல்பாடுகளில் எந்த விதத்திலும் பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உறுதி செய்துள்ளோம்” எனவும் குறிப்பிட்டார்.
சில பணியிடங்கள் நீக்கப்பட்டாலும், வேறு சில துறைகளில் பணியாளர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுவதாக போயிங் கூறியுள்ளது. இந்த மறுசீரமைப்பு, நிறுவனத்தின் செயலில் தேவையான மாற்றங்களுக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட மறு ஒழுங்கமைப்பு என்று விளக்கப்பட்டுள்ளது.
விமானத்தில் பறக்க ஆசைப்பட்டு போயிங் விமான நிறுவனத்தில் வேலையில் சேர்ந்தேன். ஆனால் தற்போது வேலையின்றி அந்தரத்தில் தொங்குகிறேன் என வேலையிழந்த ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.