கர்நாடகா பாஜகவின் சமூக ஊடகக் குழுவினர், ராகுல் காந்தியின் வெளிநாட்டு பயணத்தைக் குறிப்பிட்டு அதனை பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் இணைத்து பதிவிட்டதற்கு எதிராக, கர்நாடகா காங்கிரஸ் போலீசில் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
கர்நாடகா பாஜக பகிர்ந்த ட்வீட்டில், “ராகுல் காந்தி வெளிநாடு செல்லும் போதெல்லாம், நாட்டில் ஏதேனும் பயங்கரமான சம்பவங்கள், பதறவைக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன” என்று பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காம் சுற்றுலா இடத்தில் ஏப்ரல் 22ஆம் தேதி நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்து, 12 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதலுக்குப் பிறகு பாஜக இப்பதிவை வெளியிட்டது.
இந்த பதிவை பார்த்ததும், கர்நாடகா காங்கிரசின் சட்ட மற்றும் மனித உரிமை பிரிவு தலைவர் சி. எம். தனஞ்சயா, காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்தபோது வாட்ஸ்அப்பில் இதை பெற்றதாகவும், அது சமூக அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
அவர் அளித்த புகாரில், பாஜக சமூக ஊடகக் குழுவினருக்கும், அந்த பதிவை பகிர்ந்த மற்றவர்களுக்கும் எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுள்ளார். “இது ராகுல் காந்தியின் நற்பெயரை குலைக்கும் வகையில் திட்டமிட்டு செய்யப்பட்டுள்ளது” என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
உண்மையில் ராகுல் காந்தி அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்தபோது அவர் ரோட் ஐலண்டில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்திற்கு சென்றுள்ளார். அப்போது தான் பெஹல்காம் தாக்குதல் குறித்த அவருக்கு தெரிந்த பிறகு, உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா, மாநில காங்கிரஸ் தலைவர் தாரிக் கர்ரா ஆகியோருடன் பேசியதாக ராகுல் தனது X பக்கத்தில் குறிப்பிட்டார்.
“பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் நீதிக்குத் தகுதியானவை. அவர்களுக்கு முழுமையான ஆதரவு வழங்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டார்.
இதற்குப் பதிலளித்த காங்கிரஸ், பாஜகவின் இந்த குற்றச்சாட்டு “மோசமானது மட்டுமின்றி பொறுப்பில்லாதது எனக் கூறி, தேசிய துயரச் சூழ்நிலையை அரசியலாக்கும் முயற்சி என கண்டித்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
