முன்னாள் மைக்ரோசாஃப்ட் சிஇஓ பில் கேட்ஸ், இந்திய பயணத்தின் போது இந்தியாவின் ‘ட்ரோன் திடிகள்’ என்ற அமைப்பை சேர்ந்த பெண்களை சந்தித்தார். அவர்கள் ட்ரோன் மூலம் பூச்சிக்கொல்லி மருந்தை பயிருக்கு அடிப்பதை பார்த்து வியந்து பாராட்டினார்.
மார்ச் 19 அன்று, புது டெல்லி இந்திய வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்திற்கு வருகை தந்த பில் கேட்ஸ், நமோ ட்ரோன் திடி திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்ற பெண்கள் குழுவுடன் உரையாடினார். இந்த சந்திப்பு பெரும் கவனம் பெற்றது. மேலும் இந்திய வேளாண்மை வளர்ச்சியில் பெண்களின் பங்குக்காக கேட்ஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார்.
கேட்ஸ் தனது சமூக ஊடக பதிவில், “இந்த பெண்கள் இந்தியாவின் வேளாண்மை உற்பத்தி திறனை புதிய உயரத்திற்கு கொண்டு செல்கின்றனர். இதன் மூலம், அவர்களின் வருவாய் மட்டுமின்றி, இந்திய வேளாண்மை திறன் உயர்வதிலும் முக்கிய பங்காற்றுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
நமோ ட்ரோன் திடி திட்டம் என்பது பிரதமர் நரேந்திர மோடியால் 2023 நவம்பர் 30ஆம் தேதி வீடியோ கான்பரன்ஸ் மூலம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின்படி ரூ.1,261 கோடி ரூபாய் செலவில் 15,000 பெண்களின் சுய உதவி குழுக்களுக்கு ட்ரோன்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டம் மூலம், பெண்களுக்கு வேளாண் பணிகளில் ட்ரோன்களை பயன்படுத்தும் திறனை வழங்குதல் முக்கியக் குறிக்கோளாக இருந்தது. குறிப்பாக பூச்சிக்கொல்லி தெளிப்பு போன்ற வேளாண் பணிகளில் ட்ரோன் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த திட்டத்தில் இணைய பெண்கள் 15 நாட்கள் பயிற்சி பெற வேண்டும். பயிற்சியின் மூலம், அடிப்படை வழிகாட்டுதல் மற்றும் நடைமுறை பயிற்சி மூலம் சான்றளிக்கப்பட்ட ட்ரோன் பைலட்கள் ஆக மாறுவர். ட்ரோன் இயக்கம் மற்றும் பராமரிப்பு குறித்த முழுமையான பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சிக்கு பின் விவசாயிகளுக்கு ட்ரோன் சேவைகளை வழங்கி வருமானம் ஈட்டலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் வெறும் 7 நிமிடங்களில் ட்ரோன் மூலம் பூச்சி கொல்லி மருந்து தெளிக்கலாம். இதனால் மனித உழைப்பு மிச்சமாகிறது.