இந்திய தேசிய கட்டண நிறுவனம் (NPCI) தனது பராத் இன்டர்ஃபேஸ் ஃபார் மணி (BHIM) செயலியின் மூன்றாவது முக்கிய பதிப்பான BHIM 3.0-வை அறிமுகப்படுத்தியுள்ளது. இது மேலும் புத்திசாலியான, குடும்பத்தினர் மற்றும் தொழில் முனைவோருக்கான டிஜிட்டல் அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. BHIM 3.0 வெறும் UPI கருவியாக மட்டுமே இல்லாமல், ஒரு முழுமையான நிதி தோழனாக இருக்கும்.
இந்தியாவின் டிஜிட்டல் பயனர்களுக்கு மேலும் கூடுதல் அனுபவத்தை BHIM 3.0 வழங்குகிறது. இதில் தரவுகள் பகுப்பாய்வு, குழு செலவுகளை கண்காணிப்பு மற்றும் நேரடி நினைவூட்டிகள் போன்ற புதிய அம்சங்கள் உள்ளன. இதற்கு முந்தைய பதிப்புகளில் நண்பர்களிடையே UPI பணப்பரிமாற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த புதிய பதிப்பில், பயனர்களின் தினசரி செலவுகளை செயலியில் ஒருங்கிணைக்க முடியும்
BHIM 3.0 பதிப்பின் முக்கிய அம்சங்கள்:
1. பில்களை எளிதாக பகிர்ந்து செலுத்தலாம்: ஓட்டல்களில், வாடகை செலுத்தும் போது அல்லது ஷாப்பிங் செய்தபோது, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் பில்களை செயலியில் நேரடியாக செலுத்தலாம்.
2. குடும்ப முறை : குடும்ப உறுப்பினர்களை இந்த செயலியில் சேர்த்து அவர்களின் செலவுகளை கண்காணிக்கலாம். பெற்றோர் தங்கள் குழந்தைகளின் செலவுகளை கண்காணிக்கலாம். இதனால் குடும்பத்தின் நிதி மேலாண்மை ஒருங்கிணைக்கப்படுகிறது.
3. ஆட்டோமேட்டிக் மாதாந்திர செலவு, பயனர்கள் தங்களது செலவுகளை நன்கு புரிந்து கொள்ளுதல் மற்றும் சரியான பட்ஜெட் திட்டமிடுதல் ஆகிய வசதியும் இதில் உண்டு. எனவே இது வெறும் பணப் பரிமாற்ற கருவியாக இல்லாமல், நிதி மேலாண்மையை திறம்பட கையாளவும் உதவுகிறது.
4. மேலும் பயனர்கள் செலுத்த வேண்டிய பில்களை நினைவூட்டும். மேலும் UPI Lite செயல்படுத்த வேண்டிய நிலை வந்தால் அல்லது இருப்பு குறைவாக இருந்தால் முன்னெச்சரிக்கையாக தகவல் அனுப்பும்.
5. சிறிய கடைக்காரர்கள் மற்றும் தெரு விற்பனையாளர்களும் இந்த புதிய BHIM Vega அம்சம் மூலம் பரிவர்த்தனை செய்யலாம். கூகுள் பே, போன்பே போன்ற மூன்றாம் தரப்பு செயலிகளை தவிர்த்து குறைந்த கட்டண செலவில் மேம்பட்ட வாடிக்கையாளர் அனுபவம் கிடைக்கிறது.
6. BHIM 3.0 செயலியில் 15க்கும் மேற்பட்ட இந்திய மொழிகள் வசதி இருப்பதால் இதன் மூலம் ஆங்கிலம் தெரியாதவர்களும் டிஜிட்டல் கட்டணத்தை கையாளலாம்.
இந்த புதிய BHIM செயலி, கேஷ்லெஸ் இந்தியாவிற்கான அடித்தளமாகவும், முதியவர்கள், சிறிய கடைக்காரர்கள், மற்றும் கிராமப்புற விற்பனையாளர்கள் என அனைவருக்கும் எளிமையாகவும், பயனுள்ளதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.