நாட்டின் தலைநகரான டெல்லியில் வரும் ஜனவரி 1-ஆம் தேதி முதல், ஊபர் மற்றும் ஓலா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு போட்டியாக ‘பாரத் டாக்ஸி’ எனும் புதிய சேவை அறிமுகமாக உள்ளது. இந்தியாவின் முதல் கூட்டுறவு அடிப்படையிலான இந்த வாகன சேவை தளம், மத்திய அரசின் முழு ஆதரவுடன் செயல்படவுள்ளது. ‘சகாகர் டாக்ஸி கூட்டுறவு லிமிடெட்’ மூலம் இயக்கப்படும் இந்த சேவை, தனியார் நிறுவனங்களை போல லாபத்தை மட்டுமே நோக்கமாக கொள்ளாமல், ஓட்டுநர்களின் உரிமையையும் பாதுகாப்பையும் முன்னிறுத்துகிறது.
இந்த தளத்தின் மிக முக்கியமான அம்சம் அதன் ‘ஜீரோ கமிஷன்’ மற்றும் ஓட்டுநரே உரிமையாளர் போல் நடத்தப்படுவது ஆகும். பொதுவாக தனியார் செயலிகளில் ஓட்டுநர்கள் பெரும் தொகையை கமிஷனாக செலுத்த வேண்டியிருக்கும் நிலையில், பாரத் டாக்ஸியில் ஓட்டுநர்கள் ஈட்டும் வருமானத்தில் 80% வரை அவர்களுக்கே நேரடியாக சென்றடையும். மீதமுள்ள தொகை தளத்தின் பராமரிப்பு மற்றும் ஓட்டுநர்களுக்கான மாதாந்திர கடன் வசதி போன்ற நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும். இதன் மூலம் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் மேம்படுவதோடு, பயணிகளுக்கு நியாயமான விலையில் சேவை கிடைக்கும்.
டெல்லி போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு கார், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் என அனைத்து விதமான வாகனங்களும் இந்த செயலியில் இணைக்கப்பட்டுள்ளன. பயனர்கள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் தளங்களில் இந்த செயலியை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். இதில் வெளிப்படையான கட்டண அமைப்பு மற்றும் நிகழ்நேர வாகன கண்காணிப்பு வசதிகள் உள்ளன. இதன் மூலம் கூடுதல் கட்டணம் மற்றும் கடைசி நேர பயண ரத்து போன்ற சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாதுகாப்பு அம்சங்களை பொறுத்தவரை, டெல்லி காவல்துறையுடன் ஒருங்கிணைந்து இந்த சேவை வழங்கப்படவுள்ளது. செயலியில் இணைக்கப்படும் அனைத்து ஓட்டுநர்களும் முழுமையாக சரிபார்க்கப்படுவார்கள். மேலும், பெண் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பெண் ஓட்டுநர்கள் வசதி மற்றும் அவசர கால அழைப்பு பொத்தான்கள் போன்ற வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன. தற்போது டெல்லியில் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, ஜனவரி 1 முதல் முழுமையான வணிக ரீதியான பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
அரசு வட்டாரங்களின்படி, இதுவரை சுமார் 56,000-க்கும் மேற்பட்ட ஓட்டுநர்கள் பாரத் டாக்ஸி செயலியில் தங்களை பதிவு செய்துள்ளனர். தற்போதைய நிலையில் முன்பதிவு விமான நிலையப் பயணம் மற்றும் வெளியூர் பயணங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இருப்பினும், அறிமுக நாளிற்கு முன்னதாகவே உடனுக்குடன் வாகனங்களை முன்பதிவு செய்யும் வசதிகளும் சேர்க்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது டெல்லி மக்களின் பயண அனுபவத்தில் ஒரு புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.
பாரத் டாக்ஸி நிறுவனம் டெல்லியை தொடர்ந்து ராஜ்கோட் மற்றும் இந்தியாவின் பிற 20 முக்கிய நகரங்களுக்கும் தனது சேவையை விரிவுபடுத்தத் திட்டமிட்டுள்ளது. அமுல், நபார்டு போன்ற பெரிய நிறுவனங்களின் பின்னணியை கொண்டுள்ள இந்த திட்டம், உலகளாவிய ஜாம்பவான்களான ஊபர் மற்றும் ஓலாவுக்கு உண்மையான சவாலாக விளங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜனவரி 1-ஆம் தேதி டெல்லி வாசிகள் ‘புக் ரைடு’ பொத்தானை அழுத்தும்போது, இந்தியாவின் புதிய போக்குவரத்து புரட்சி அதிகாரப்பூர்வமாக தொடங்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
