முன்பு மக்கள் மத்தியில் அதிகம் பிரபலமாவதற்கு நிறைய கடினமான விஷயங்களை செய்தாலும் உடனடியாக பலன் கிடைத்துவிடாது. அதிர்ஷ்டமும், நல்ல சந்தர்ப்பமும் அமைந்தால் மட்டும் தான் மக்கள் மத்தியில் பெயரை சம்பாதித்து பெரிய அளவில் புகழ் பெறவும் முடியும்.
ஆனால் தற்போதெல்லாம் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு மிக அதிகமாக இருப்பதால் நாம் வேடிக்கையாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து அதனை இணையத்தில் பதிவிட்டாலே மிக மிக எளிதாக குறுகிய நேரத்திலேயே மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்து விடலாம். சமீப காலமாக கூட அந்த வகையில் ஜிபி முத்து, அமலா ஷாஜி, டிடிஎப் வாசன் என எண்ணில் அடங்காத சாதாரண மக்கள் ஏதாவது வேடிக்கையான விஷயங்களிலோ அல்லது நடனம், நடிப்பு உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டு மிகக் குறுகிய காலத்தில் பிரபலமடைந்து விட்டார்கள்.
இவர்களுக்கான ரசிகர்கள் பட்டாளமும் அதிகமாக இருக்க பல இடங்களில் சிறப்பு விருந்தினர்களாக கூட அழைக்கப்பட்டு வருகின்றனர். அந்த அளவுக்கு சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் விஷயங்களின் தாக்கம் மிகப்பெரிய அளவில் இருப்பதால் தினந்தோறும் கூட நிறைய செய்திகளோ, நிகழ்வுகளோ வைரல் ஆவதையும் நாம் பார்த்திருப்போம்.
அந்த வகையில் பெங்களூரை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் சமீபத்தில் செய்த விஷயம் ஒன்று மிகப் பெரிய அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது. ஆட்டோவில் பொதுவாக சாதாரண இருக்கைகளில் அமர்ந்து தான் ஓட்டுநர்கள் வண்டி ஓட்டுவார்கள். ஆனால் தற்போது வைரலான ஒரு புகைப்படத்தில் அலுவலகத்தில் பயன்படுத்தப்படும் ஆபீஸ் சேர் ஃபிட் செய்யப்பட்டு அதில் அமர்ந்து ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்.
மற்ற இருக்கைகளில் சிறிது நேரம் உட்கார்ந்தாலே வலிகளால் அவதிப்படும் சூழலில் ஆபீஸ் சேர் என வரும் போது சற்று வசதியாகவும் அமர்ந்திருக்கலாம். இப்படி ஒரு புதுமையான ஐடியாவை ஆட்டோவில் புகுத்த வேண்டும் என நினைத்த அந்த ஓட்டுநரை தற்போது பலரும் மிகப்பெரிய அளவில் பாராட்டி வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பெங்களூரில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஸ்மார்ட் வாட்சில் யுபிஐ மூலம் கட்டணத்தை வசூலித்திருந்தார்.
அதற்கு முன்பு ஓட்டுநர் ஒருவர் ஜன்னல் ஒன்றை தனது ஆட்டோவில் ஃபிட் செய்திருந்ததும் பெரிய அளவில் கவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்படி பெங்களூரைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் பலர் தொழில்நுட்ப ரீதியாகவும் புதுமையான விஷயங்களை கையில் எடுத்து வருவது பலரையும் வியந்து பார்க்க வைத்துள்ளது.
இந்த புகைப்படத்தின் கீழ் பலரும் பெங்களூர் ஐடி ஹப் என்பதை நிரூபிக்கும் வகையில் அந்த ஆட்டோ ஓட்டுநர் செய்திருப்பதாகவும் நிச்சயம் ஒரு முறையாவது இந்த ஆட்டோவில் பயணம் மேற்கொள்ள வேண்டும் என்றும் விதவிதமான கமெண்ட்களை குறிப்பிட்டு வருகின்றனர்.