கொல்கத்தா போலீசாரால் 28 வயதான வங்கதேச நடிகையும், மாடலுமான சாந்தா பால் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் இந்திய அடையாள ஆவணங்களான ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை வைத்திருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
காவல்துறை விசாரணையில் சாந்தா பால் வங்கதேசத்தில் பல மாடலிங் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். மேலும், 2023 ஆம் ஆண்டு முதல் ஜாதவ்பூர், பிஜோய்கரில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்துள்ளார்.
இந்த நிலையில் திடீரென அவரது இல்லத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போதும், காவல்துறை பல அடையாள ஆவணங்களை கைப்பற்றியது. அவற்றில் வங்கதேச வங்கதேச அரசின் அடையாள அட்டை, வங்கதேசத்தில் வழங்கப்பட்ட ஒரு விமான நிறுவன அடையாள அட்டை, மற்றும் இரண்டு ஆதார் அட்டைகள், அதில் ஒன்று கொல்கத்தாவிலும், மற்றொன்று பர்தமான் மாவட்டத்திலும் பதிவு செய்யப்பட்டிருந்தன. பர்தமான் ஆதார் அட்டை 2020 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
சாந்தா பால் சமீபத்தில் தாகூர்புகூர் காவல் நிலையத்தில் ஒரு மோசடி புகார் அளித்திருந்தார். அதில் அவர் வேறு ஒரு முகவரியை குறிப்பிட்டிருந்தார். விசாரணையாளர்களின் கூற்றுப்படி, அவர் அடிக்கடி முகவரிகளை மாற்றிக்கொண்டதுடன், வெவ்வேறு அடையாளங்களின் கீழ் வசித்துள்ளார்.
சாந்தா பால் இந்திய ஆவணங்களின் ஆதாரம் குறித்து திருப்திகரமான விளக்கம் அளிக்கவில்லை என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஒரு பெரிய மோசடி கும்பல் இதில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகித்து வருகின்றனர். இந்த ஆவணங்கள் எவ்வாறு பெறப்பட்டன, எந்தெந்த ஆதார ஆவணங்கள் பயன்படுத்தப்பட்டன என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஆதார், வாக்காளர் அட்டை மற்றும் ரேஷன் கார்டின் உண்மைத்தன்மையை சரிபார்க்க லால்பஜார், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தேர்தல் ஆணையம் மற்றும் மாநில உணவுதுறையை தொடர்புகொண்டுள்ளது. சாந்தா பாலின் பூர்வீகம் வங்கதேசத்தின் பரிசால் என்ற பகுதி என விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அதன்பின் சாந்தா பால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை காவல்துறை காவலில் வைக்கப்பட்டுள்ளார். அவரது கணவர், ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். மேலும், தென் கொல்கத்தா பிளாட்டில் அவருடன் தங்கியிருந்த அவரது பெற்றோர்கள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரு ஆண் நண்பரும் விசாரிக்கப்பட்டு வருகிறார், இருப்பினும் அவருக்கு எதிராக இதுவரை எந்த ஆதாரமும் கண்டறியப்படவில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
