பொதுவாக, வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர் வீட்டை காலி செய்யும்போது, தான் கொடுத்த அட்வான்ஸ் தொகையை வீட்டு உரிமையாளரிடம் திரும்ப பெறுவதில் பெரும் பிரச்சனைகளை எதிர்கொள்வது வாடிக்கை. 90% வீட்டு உரிமையாளர்கள் அட்வான்ஸ் தொகையை முழுமையாக தராமல், ஏதேதோ காரணங்களை கூறி பிடித்தம் செய்து கொள்வதாகவும், கிட்டத்தட்ட பாதி பணத்தை மட்டுமே கொடுப்பதாகவும் நீண்டகாலமாகவே ஒரு குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால், பெரும்பாலான வாடகைதாரர்கள் வீட்டை காலி செய்யும்போது வீட்டு உரிமையாளர்களுடன் சண்டையிட்டுத்தான் செல்கின்றனர்.
ஆனால், இதற்கு முற்றிலும் மாறாக, ஒரு நபர் வீட்டை காலி செய்தபோது தனது வீட்டு உரிமையாளர் அளித்த விலைமதிப்புமிக்க பரிசால் ஆச்சரியமடைந்த தனது அனுபவத்தை தனது ரெடிட் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதை அறிந்த நெட்டிசன்கள், “உண்மையிலேயே இது நடந்ததா?” என்று ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
அந்தப் பதிவில் அவர் கூறியிருப்பதாவது: எனது பெருமை இதுதான், பெங்களூருவில் எனக்கு ஒரு வீட்டு உரிமையாளர் கிடைத்தார். அவர் எனக்கு ஒரு வெள்ளி காப்பு பரிசாக கொடுத்தார். இங்குள்ள வீட்டு உரிமையாளர்கள் வைப்புத்தொகையைக்கூட திரும்ப தராத ஒரு நகரத்தில், எனது வீட்டு உரிமையாளர் எனக்கு பிரியாவிடை பரிசளித்து, நான் தங்கிய இரண்டு வருடங்களும் தனது மகனை போலவே நடத்தினார். எனக்கு தேவைப்படும் போதெல்லாம் தனது ஸ்கூட்டியை அவர் எனக்கு கொடுப்பார். அவர் கொடுத்த வெள்ளிக்காப்பு விலை குறைவாக இருக்கலாம், ஆனால் அது என்னை பொருத்தவரை விலை மதிப்பில்லாதது’ என்று பதிவு செய்துள்ளார்.
இந்த பதிவுக்குப் பதிலளித்த ஒரு பயனர், “8 பில்லியனில் 1 என்ற அளவில் இருக்கும் ஒரு வீட்டு உரிமையாளரை கண்டுபிடித்திருக்கிறீர்கள்” என்று எழுதினார். மற்றொருவர், “மிகவும் அரிதான, அரிதிலும் அரிதான நிகழ்வு” என்று கருத்து தெரிவித்தார்.
“ஏதேனும் ஒரு வகையில் நீங்கள் நன்றியை திருப்பிச் செலுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவ்வளவு நல்ல மனிதர்கள் கிடைப்பது அரிது, உங்கள் செயல்கள் மூலம் அதை நீங்கள் அவரிடம் வெளிப்படுத்த வேண்டும்,” என்று ஒரு கருத்து குறிப்பிட்டது.
ஒரு பயனர், வீட்டு உரிமையாளர் தனிமையாக இருந்திருக்கலாம் என்றும், அதனால் ஒரு நண்பர் தேவைப்பட்டிருக்கலாம் என்றும், அவரை இரவு உணவிற்கு அழைத்து செல்லுமாறும் கருத்து தெரிவித்தார். ஆனால், கதையைப் பகிர்ந்து கொண்ட அந்த நபர், வீட்டு உரிமையாளர் தனிமையானவர் அல்ல என்று பதிலளித்தார். அவர் தனது மனைவி, மருமகள் மற்றும் பேரனுடன் குடும்பத்துடன் வாழ்ந்துள்ளார்.
உண்மையில், அந்த குடும்பம் முழுவதுமே என்னிடம் அன்பாக இருந்துள்ளனர். அந்த குடும்பத்தினருடன் பலமுறை உணவகங்கள், திரைப்படங்கள் மற்றும் ஷாப்பிங்கிற்கு கூட சென்றுள்ளேன். அவர்கள் என்னை தங்கள் குடும்பத்தில் ஒருவராகவே நடத்தினர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிகழ்வு, பெங்களூருவின் பொதுவான வீட்டு உரிமையாளர் – வாடகைதாரர் அனுபவத்திற்கு முற்றிலும் மாறாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
