பெரும்பாலான தோல் சம்பந்தப்பட்ட பொருட்கள் விலங்குகளின் தோலிலிருந்து எடுத்து உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், இளம்பெண் ஒருவர் மாற்று யோசித்து, வாழைமரத்தின் கழிவுகளில் இருந்து தோல் பொருட்களை உற்பத்தி செய்து சாதனை செய்துள்ளார். தற்போது, அவர் கோடிக்கணக்கில் வருமானம் தரும் தொழிலாக அதை மாற்றியுள்ளார்.
இந்தியாவில் பாரம்பரிய மிக்க தோல் உற்பத்தி முறை மாசு ஏற்படுத்தும் ஒரு தொழிலாக இருப்பதை கவனித்த ஜனாதி மோடி என்ற இளம் பெண், மாற்று யோசித்து வாழைப்பழக் கழிவுகளை மறுசுழற்சி செய்வதன் மூலம் தோல் பொருட்களை உற்பத்தி செய்யலாம் என்பதை கண்டுபிடித்தார். யேல் பல்கலைக்கழகத்தில் சுற்றுச்சூழல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தோல், நுண்துணி வடிவமைப்பு, விவசாய மற்றும் பொருள் அறிவியல் துறை நிபுணர்களிடம் கலந்து ஆலோசித்து ஒரு புதிய நிறுவனத்தை தொடங்கினார்.
இந்த நிறுவனம் வாழை விவசாய கழிவுகளை மறுசுழற்சி செய்து, தோல் சம்பந்தப்பட்ட பொருட்களை தயாரிப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவை பொருத்தவரை, ஒரு வருடத்திற்கு 30 மில்லியன் டன் வாழைப்பழங்கள் உற்பத்தி செய்யப்படும் நிலையில், அதில் 120 மில்லியன் டன் கழிவாக கிடைக்கிறது. குறிப்பாக, வாழைத்தண்டு, வாழை இலைகள், வாழை நார், வாழைப்பழ தோல் உள்ளிட்டவை வீணாகின்ற நிலையில், அதிலிருந்து 60% கழிவுகளை மீண்டும் உயிர்ப்பிக்கலாம் என்பதை கண்டுபிடித்தார்.
விவசாயிகள் பயன்படுத்தாமல் தூக்கி எறியும் வாழைக்கழிவுகளை நேரடியாக சேகரித்து, அதிலிருந்து பைபரை பிரித்து எடுக்கிறார். இதுதான் முக்கிய மூலப்பொருளாக பயன்படுகிறது. அதன் பிறகு, சில கெமிக்கல்களை குறைந்த அளவில் சேர்த்து, தோல் பொருட்களை தயாரிக்கிறார். இதன் மூலம், வாழைப்பழக் கழிவுகளை பயன்படுத்தாமல் இருந்த விவசாயிகளுக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது. முன்பை விட தற்போது 30% அதிக வருமானம் கிடைப்பதாக சிறு விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இவரது நிறுவனத்தில் 60% பெண்கள் பணியாற்றி வருவதால், பெண்களின் வணிக முன்னேற்றத்திற்கும் இது உதவியாக உள்ளது. தோல் தொழிலில் ஒரு புதிய புரட்சியை உருவாக்கி, எதிர்கால பேஷனுக்கு திருப்புமுனையாக திகழ்ந்து வரும் இவருடைய நிறுவனம் குறிப்பிடத்தக்கது.