பெங்களூரில் உள்ள IIM-B அதாவது Indian Institute of Management Bengaluru என்ற நிறுவனத்தின் லோகோ பொறித்த டீசர்ட் அணிந்து ஆட்டோ ஓட்டி வந்த ஓட்டுநர் ஒருவரின் கதை, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அபூர்வா என்ற பெண், தனது ஆட்டோ பயணத்தின்போது இந்த நெகிழ்ச்சியான சம்பவத்தை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்திருக்கிறார்.
ஐஐஎம்-பி டீசர்ட் பின்னணி
ஆட்டோ ஓட்டுநர் அணிந்திருந்த டீசர்ட் பின்னால், “IIM Bangalore” என்று எழுதப்பட்டிருப்பதை கண்ட அபூர்வா, ஆர்வத்துடன் அவரிடம் பேச தொடங்கியுள்ளார். அப்போது, அந்த ஆட்டோ ஓட்டுநர் ஐஐஎம்-பி விடுதி உணவகத்தில் முழுநேர ஊழியராக பணிபுரிபவர் என்பது தெரியவந்துள்ளது. விடுதியில் தங்கியிருந்த மாணவர்கள், அவரது சிறந்த சேவைக்காக அன்பின் அடையாளமாக இந்த டீசர்ட் பரிசாக அளித்துள்ளனர். மேலும், குடும்பத்திற்கு உதவியாக இருக்க வேண்டும் என்பதற்காக பகுதி நேரமாக ஆட்டோ ஓட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தை அபூர்வா தனது சமூக வலைத்தள பதிவில், “எனது ஆட்டோ ஓட்டுநர் ஐஐஎம்-பி டீசர்ட் அணிந்திருந்தார். அவரிடம் பேசியபோது, அவர் விடுதி உணவகத்தில் பணிபுரிவதாகவும், மாணவர்கள் இதனை அன்பளிப்பாக கொடுத்ததாகவும் தெரிவித்தார். மேலும், ஆட்டோ ஓட்டுவது பகுதி நேர வேலை” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பதிவு, சமூக வலைத்தளங்களில் விரைவாக பரவியது. பலரும் இதற்கு பல்வேறு விதமான கருத்துகளை தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், “அன்பு நாம் நினைப்பதை விட வேகமாகப் பயணிக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார். மற்றொரு பயனர், “ஐஐஎம்-பி மாணவர்கள் உண்மையில் அன்பானவர்கள். அவர்கள் தங்களை சுற்றியுள்ளவர்களை எவ்வாறு கவனித்துக்கொள்கிறார்கள் என்பதை நான் கடந்த வாரம் அறிந்தேன்” என்று எழுதியுள்ளார்.
இருப்பினும், ஒரு பயனர், “ஐஐஎம்-பி போன்ற கல்வி நிறுவனங்கள் லட்சக்கணக்கில் கட்டணம் வசூலிக்கும்போது, அங்கே பணிபுரியும் ஊழியர்கள் குடும்பத்தை காப்பாற்ற இரண்டு வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. அவர்களின் சம்பள கட்டமைப்பு குறித்து நாம் தெரிந்துகொள்ள வேண்டும்” என்று கேள்வி எழுப்பினார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
