கிறிஸ்துமஸ், ரம்ஜான், பொங்கல் என பல பண்டிகைகள் மதங்கள் ரீதியாக பிரிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வந்தாலும் சில பண்டிகைகள் நாடெங்கிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் வரும். அந்த வகையில் மிக முக்கியமான ஒரு திருநாள் தான் தீபாவளி. இந்த ஆண்டு தீபாவளியும் மிக தற்போது நெருங்கி உள்ளதால் நாடெங்கிலும் உள்ள மக்கள் அதனை மிக விமரிசையாக கொண்டாடுவதற்கான முயற்சிகளையும் கவனித்து வருகின்றனர்.
புத்தாடைகள் உடுத்து, பட்டாசுகள் வெடித்து வீடெங்கிலும் பலகாரங்கள் தயார் செய்து அந்த நாளை மிகுந்த ஒரு கலர்ஃபுல்லான தினமாக அனைவரும் மாற்றுவார்கள். தீபாவளி நாள் உருவானதற்கு வரலாற்று காரணங்கள் பல இருக்கும் நிலையில், ஒரு ஊரின் பெயரே தீபாவளி என்று இருப்பதுடன் அதன் பின்னணி தான் தற்போது பலரையும் ஒரு நிமிடம் வியப்பாக பார்க்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் என்னும் பகுதியில் அமைந்துள்ளது தீபாவளி என்ற ஒரு கிராமம். இங்கே தீபாவளி பண்டிகை ஐந்து நாட்கள் கொண்டாடப்படும் நிலையில் அதற்கான பின்னணி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்ரீகாகுளம் என்ற மாவட்டம் இருந்த பகுதியை ஒரு அரசன் ஆண்டு வந்ததாக கூறப்படுகிறது. அப்போது இவர் அந்த கிராமம் வழியே அடிக்கடி சென்று ஸ்ரீ குமாரனந்தன் என்ற கோவிலில் வழிபட்டு வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றது.
ஒரு நாள் இந்த கோவிலுக்கு சென்று விட்டு அந்த அரசன் திரும்பி வரும் வழியில் திடீரென தனது சுயநினைவை இழந்து விட்டதாக தெரிகிறது. அப்போது அந்த கிராமத்தில் இருந்த மக்கள் விளக்கு வெளிச்சத்தில் அரசனை காப்பாற்றி அவருக்கு தண்ணீரும் கொடுத்துள்ளனர். இதனால் சுயநினைவு பெற்று கண் திறந்து பார்த்த அந்த அரசர், அவர்களுக்கு நன்றி சொன்னதுடன் அந்த ஊரின் பெயர் என்ன என்று கேட்டுள்ளார்.
ஆனால் குறிப்பிட்ட ஒரு பெயர் அந்த கிராமத்திற்கு இல்லை என அங்குள்ள மக்கள் தெரிவிக்க, ‘விளக்கு வெளிச்சத்தில் என்னை நீங்கள் காப்பாற்றியதால் இந்த தீபாவளி என இந்த ஊருக்கு பெயரிடுகிறேன்’ என அந்த அரசன் தெரிவித்துள்ளார். அன்றிலிருந்து தற்போது வரை தீபாவளி என இந்த ஊருக்கு பெயர் இருந்து வருவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.
மேலும் இந்த கிராமத்தில் உள்ள மக்கள், ஐந்து நாட்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதுடன் அவர்களின் முன்னோர்களை முதலில் வழிபடுவதை தான் வழக்கமாகவும் வைத்துள்ளனர். இந்தியா முழுவதும் தீபாவளி பண்டிகையை கொண்டாடினாலும் ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் தீபாவளி என்ற கிராமம், இன்னும் விமரிசையாக ஊர் மக்கள் அனைவரும் இணைந்து இதனை கொண்டாடும் தகவலும் தற்போது அதிக கவனம் பெற்று வருகிறது.