நாம் தொழில்நுட்ப யுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தாலும் பல இடங்களில் வேறு சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரை தங்கள் குடும்பத்தில் இருந்து ஒருவர் காதலித்து வந்தாலே மிகப்பெரிய ஒரு தவறாகத்தான் பார்க்கப்பட்டு வருகிறது. மதம் மாறியோ அல்லது வேறு சமுதாயத்தில் இருந்த ஒருவரையோ காதலித்து விட்டால் அது ஏதோ உலகத்திலேயே மிகப்பெரிய ஒரு குற்றத்தை செய்தது போல பல குடும்பத்தினர் இன்று வரையிலும் பார்த்து வருகிறார்கள்.
ஆனால் இதையெல்லாம் தாண்டி அபூர்வமாக பல இடங்களில் தாங்கள் விரும்பும் நபர்களை திருமணம் செய்ய சம்மதிப்பதும் பலர் ஆதரிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. நிறம், சாதி, மதம் உள்ளிட்ட விஷயங்களை பார்க்காமல் தங்களுக்கு விருப்பமான ஒருவரை குடும்பத்தினரின் ஆதரவுடன் பலர் திருமணம் செய்து வருகின்றனர்.
அமெரிக்கா – இந்தியா காதல்
அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பெண் ஒருவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த வாலிபரை திருமணம் செய்த நிலையில் சமீபத்தில் அவர் பகிர்ந்த வீடியோ தான் இணையத்தில் அதிகம் வைரலாகி வருகிறது. அமெரிக்காவை சேர்ந்தவர் தான் ஹென்னா (Hanna). இவர் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த தீபக் என்ற வாலிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது.
திருமணத்திற்கு பின்னர் கணவரின் குடும்பத்தினருடன் தற்போது பெங்களூரில் தங்கி வரும் இவர், அவரது கணவரின் குடும்பத்தை பற்றி பகிர்ந்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. அந்த வீடியோவில் தனது கணவர், மாமியார் மற்றும் மாமனார் ஆகியோருடன் இருக்கும் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்துள்ள ஹன்னா, “நான் இப்போது ஒடியாவை சேர்ந்த ஒரு குடும்பத்தின் அங்கமாக உள்ளேன்.
நாங்கள் எப்போதெல்லாம் சேர்கிறோமோ அப்போதெல்லாம் நிறைய அன்பையும், நிறைய உணவையும், நிறைய கதைகளையும் பரிமாறிக் கொள்வோம். அவர்கள் அனைவருமே மிக அன்பான மக்கள். அனைத்து மருமகளுக்கும் இது இப்படி ஒரு குடும்பத்தினர் கிடைக்க வேண்டும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனது கணவரை திருமணம் செய்து கொண்ட பின்னர் பல விஷயங்கள் எனது வாழ்க்கையில் மாறியது.
பாக்கியம் செஞ்சுருக்கணும்
அதில் இப்படி ஒரு குடும்பத்தினர் எனக்கு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். நிச்சயம் பல மருமகளுக்கும் எனக்கு கிடைத்தது போன்ற ஒரு அதிர்ஷ்டம் கிடைக்காது. ஆனால் இதை பார்க்கும் பலரும் இன்ஸ்பயர் ஆகி குடும்ப பின்னணி மற்றும் கலாச்சாரம் வித்தியாசமாக இருந்த போதும் இந்த அளவுக்கு அன்பு காட்டுவதை பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும்” என ஹன்னா குறிப்பிட்டுள்ளார்.
சொந்த ஊரிலிருந்து பெண் எடுத்தாலே அதில் பல சிக்கல்களும், பிரச்சனைகளும் வர நாடு விட்டு நாடு வந்த மருமகளை இந்த அளவுக்கு பாசமாக கவனித்து வரும் மாமனார், மாமியாரை பலரும் பாராட்டி வருவதோடு இந்தியா கலாச்சாரத்தை ஏற்றுக் கொண்ட ஹன்னாவையும் பலர் வியந்து பார்த்து வருகின்றனர்.