இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான நீண்டகாலமாக நிலுவையில் உள்ள வர்த்தக ஒப்பந்தம் விரைவில் இறுதி செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த மூன்று நபர்கள் தெரிவித்த தகவலின்படி, இந்த ஒப்பந்தம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதன்மூலம், இந்திய ஏற்றுமதிக்கான அமெரிக்காவின் தற்போதைய 50% வரி, சுமார் 15% முதல் 16% ஆகக் குறைய வாய்ப்புள்ளது.
இந்த ஒப்பந்தப் பேச்சுவார்த்தையின் முக்கிய அம்சங்களாக எரிசக்தி மற்றும் விவசாயம் ஆகியவை உள்ளன. இந்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, இந்தியா ரஷ்ய எண்ணெய் இறக்குமதியை படிப்படியாக குறைக்க ஒப்புக்கொள்ள வாய்ப்புள்ளது. அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் 25% வரிக்கு இதுவே முக்கியக் காரணமாக இருந்தது.
தற்போது, இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியில் சுமார் 34% ரஷ்யாவிடம் இருந்தும், மொத்த எண்ணெய் மற்றும் எரிவாயு தேவையில் சுமார் 10% அமெரிக்காவிடம் இருந்தும் இறக்குமதி செய்யப்படுகிறது. பதிலுக்கு, அமெரிக்கா எரிசக்தி வர்த்தகத்தில் சலுகைகள் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த ஒப்பந்தம் குறித்து இந்தியா அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடாது என்றும், மாறாக, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் கொள்முதலை அமெரிக்காவை நோக்கி திருப்புமாறு அறிவுறுத்தப்படலாம் என்றும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கா தற்போது ரஷ்யா வழங்கும் அளவுக்கு தள்ளுபடிகளை வழங்க தயாராக இல்லை என்றாலும், ரஷ்யாவின் தள்ளுபடிகள் குறைந்து வருவதால், அமெரிக்க எண்ணெய் தற்போது மிகவும் போட்டித்தன்மை வாய்ந்ததாக மாறி வருகிறது.
“விலைகள் உள்நாட்டு எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகளுக்கு லாபகரமானதாக இருந்தால், அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு இறக்குமதியை அதிகரிக்க தயாராக உள்ளோம்,” என்று இந்தியா தரப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்காவின் மரபணு மாற்றப்பட்ட சோளம் மற்றும் சோயா தீவனம் சிலவற்றை இந்திய சந்தையில் அனுமதிக்க இந்தியா ஒப்புக்கொள்ளலாம். இருப்பினும், இது மனித நுகர்வுக்காக இல்லாமல் விலங்குகளுக்காக மட்டும் இருக்கலாம். மேலும், இறுதி ஒப்பந்தத்தில் வரிகள் மற்றும் சந்தை அணுகலை மறுபரிசீலனை செய்ய ஒரு வழிமுறையை சேர்க்கவும் இந்தியா வலியுறுத்துகிறது.
சீனாவின் வர்த்தக கட்டுப்பாடுகள் மற்றும் அமெரிக்க சோள இறக்குமதியில் சீனா காட்டிய கடும் குறைப்பு ஆகியவை இந்த ஒப்பந்தத்தை விரைவுபடுத்த முக்கியக் காரணமாக உள்ளன. 2022-இல் $5.2 பில்லியனாக இருந்த அமெரிக்க சோள இறக்குமதியை, 2024-இல் சீனா வெறும் $31 மில்லியனாகக் குறைத்துள்ளது. சீனா மற்ற நாடுகளிடம் இருந்து சோயா பீன்ஸை வாங்க தொடங்கியதால், அமெரிக்கா அவசரமாக புதிய வாங்குபவர்களை தேடி வருகிறது.
இந்தியாவில் கோழித் தீவனம் மற்றும் எத்தனால் தொழில்களில் உள்நாட்டுத் தேவை அதிகரித்து வருவதால், அமெரிக்க சோளத்திற்கான சந்தை அணுகலை அதிகரிக்க செய்யும் அமெரிக்காவின் கோரிக்கையை இந்தியா பரிசீலிக்கலாம்.
சோயாபீன்ஸ் பதப்படுத்துபவர்கள் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டி.என். பதக், அமெரிக்காவிலிருந்து சோயா தீவன இறக்குமதியை அனுமதிப்பது உள்நாட்டுத் துறைக்குப் பாதகமாக இருக்கும் என்று எச்சரித்துள்ளார். “உள்நாட்டு விவசாயிகள் ஏற்கனவே குறைந்தபட்ச ஆதரவு விலைக்கே போராடி வரும் நிலையில், வெளிநாட்டுச் சோயா தீவனத்திற்குச் சலுகை அளிப்பது உள்நாட்டு விலைகளை மேலும் குறைத்து, உள்நாட்டுப் பதப்படுத்துதல் துறையைப் பாதிக்கும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா இந்தியாவுக்கு 16% முதல் 18% வரை வரி அணுகலை வழங்கலாம். இது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஜப்பானுக்கு (15%) வழங்குவதை விட அதிகம்; ஆனால் வியட்நாமிற்கு (20%) வழங்குவதை விட குறைவு.
இந்த வர்த்தக ஒப்பந்தம் நவம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்யப்படலாம் என்று வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர். இருப்பினும், விவசாயம், டிஜிட்டல் வர்த்தகம் மற்றும் மின் வர்த்தகம் போன்ற முக்கிய விவகாரங்களில் இந்தியா தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும் என்றும், சீனாவுக்கு எதிரான எந்தவொரு பிரிவுகளையும் தவிர்ப்பது அவசியம் என்றும் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். சந்தை சூழ்நிலைகளுக்கு ஏற்ப எதிர்கால வர்த்தக சலுகைகளுக்கான நெகிழ்வுத்தன்மையை உறுதி செய்யும் வகையில் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டு வருகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
