இனிமேல் பங்குச்சந்தை பக்கம் யாராவது போவீங்க.. அம்பானிக்கு ரூ.29,397 கோடி.. அதானிக்கு ரூ.52,005 கோடி நஷ்டம்..

    2025ம் ஆண்டு தொடக்கம் முதலே, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில்  சுமார் ரூ.2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பிற்கு முக்கிய காரணங்களாக உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, பங்கு…

ambani adani

 

 

2025ம் ஆண்டு தொடக்கம் முதலே, இந்தியாவின் முன்னணி தொழிலதிபர்களின் சொத்து மதிப்பில்  சுமார் ரூ.2.6 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்த இழப்பிற்கு முக்கிய காரணங்களாக உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை, பங்கு சந்தை ஏற்ற இறக்கம், மற்றும் அமெரிக்காவின் வரி கொள்கைகள் ஆகியவற்றினால் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த இறக்குமதி மற்றும் ஏற்றுமதி பொருட்கள் மீதான அதிக வரி விதிப்பு, உலகளாவிய வர்த்தகத்தில் பதட்டத்தை உருவாக்கியுள்ளது. இதனால் முதலீட்டாளர்கள் நம்பிக்கை இழந்து முதலீடுகளை திரும்ப பெற்றதால், பங்குச் சந்தைகள் சரிவடைந்தன. இந்திய பங்குச் சந்தையும் இந்த தாக்கத்திலிருந்து விலகவில்லை.

இந்தியாவின் முன்னணி பணக்காரர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு சுமார் ரூ.29,397 கோடி குறைந்துள்ளது. இதனால் உலகின் முதல் 10 பணக்காரர் பட்டியலில் இருந்து அவர் விலகி, தற்போது 87.2 பில்லியன் டாலர் சொத்துகளுடன் 17வது இடத்தில் உள்ளார். அவரது நிறுவனங்கள் ரிலையன்ஸ் மற்றும் ஜியோ பைனான்ஸ் ஆகியவை முறையே 0.10% மற்றும் 24% குறைந்துள்ளது.

இந்தியாவின் இன்னொரு முன்னணி பணக்காரர் அதானி நிறுவன பங்குகள் 9% வரை சரிந்ததால்,  சுமார் ரூ.52,005 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

HCL நிறுவனர் ஷிவ் நாடார் மிகப்பெரிய இழப்பை சந்தித்தவராக  உள்ளார். அவரின் சொத்து மதிப்பு $10.5 பில்லியன் குறைந்துள்ளது. அதேபோல் ஷபூர் மிஸ்த்ரி  சொத்து மதிப்பும் $6.50 பில்லியன் இழந்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி முதல் இன்று வரை, சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஆகிய முக்கிய பங்குச்சந்தை குறியீடுகள் 4.5% சரிந்துள்ளன. BSE Midcap மற்றும் Smallcap குறியீடுகள் முறையே 14% மற்றும் 17% இழப்பை சந்தித்துள்ளன.

இந்த வீழ்ச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று வெளிநாட்டு நிதி நிறுவனங்கள்  இந்திய சந்தையிலிருந்து தங்கள் முதலீடுகளை திரும்பப் பெறுவதாகும். உலகளாவிய மந்தநிலை ஏற்படும் அபாயம் மற்றும் பங்குகளின் அதிக மதிப்பீடு ஆகியவை, முதலீட்டாளர்களை மிகவும் எச்சரிக்கையாக செயல்பட செய்து வருகின்றன.

இவ்வாறு, உலகளாவிய சந்தையின் மாற்றங்களும், அமெரிக்க வரி கொள்கைகளும், இந்திய தொழிலதிபர்கள் மற்றும் பங்குச் சந்தை மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் தற்போது நிலைமை சீரடைந்து வருவதால் மீண்டும் பங்குச்சந்தை காளையின் பிடியில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.