திருப்பதி: ஆந்திர மாநிலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று நடந்த போராட்டத்தில் நடிகையும் முன்னாள் அமைச்சருமான ரோஜா கலந்து கொண்டார். அப்போது சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக ஆவேசமாக பேசிய ரோஜா, எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களை சிறையில் அடைப்பதில் மட்டும்தான் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது என்றார்.
ஆந்திர மாநிலத்தில் தெலுங்கு தேசம், ஜனசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அண்மையில் மின் கட்டணத்தை உயர்த்தி அறிவித்தார். இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ஆந்திர மாநிலத்தில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் ஜெகன்மோகன் ரெட்டியின் அழைப்பை ஏற்று மாநிலம் தழுவிய போராட்டம் நடைபெற்றது. நகரி தொகுதியில் முன்னாள் அமைச்சர் நடிகை ரோஜா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
முன்னதாக புத்தூரில் உள்ள ஆரேடம்மா கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்த ரோஜா, அக்கட்சித் தொண்டர்களுடன் மோட்டார் சைக்கிள் ஓட்டியபடி பேரணியாக மின்துறை அலுவலகம் வரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை எதிர்த்து கோஷமிட்டபடி சென்றார்.
அப்போது நடிகை ரோஜா கூறும்போது, “ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியில் அமல்படுத்திய எஸ்.சி, எஸ்.டி. மக்களுக்கு 200 யூனிட் வரை இலவச மின்சார திட்டத்தை நீட்டிக்க வேண்டும். வீட்டு உபயோக மின்சாரத்தின் மீது முதல்வர் சந்திரபாபு நாயுடு அரசு உயர்த்திய 15,485.36 கோடி ரூபாய் கட்டணத்தை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இல்லாவிட்டால் இந்த கட்டணம் வாபஸ் பெரும் வரை எங்கள் போராட்டம் ஓயாது.
தேர்தலின் போது தாங்கள் ஆட்சிக்கு வந்தால் 5 ஆண்டுகள் வரை மின் கட்டணத்தை உயர்த்த மாட்டோம் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும். அதைவிட்டு விட்டு எதிர்க்கட்சியினர் மீது பொய் வழக்குகள் போட்டு அவர்களை சிறையில் அடைப்பதில் மட்டும்தான் இந்த அரசு முனைப்புடன் செயல்படுகிறது” என்றார். பின்னர் இது தொடர்பான மனுவை நகரியில் உள்ள மின்துறை அதிகாரியிடம் கொடுத்தார்.