நாடு முழுக்க தற்போது ஆதார் அட்டை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. செப்டம்பர் 14 கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டதால் இ-சேவை மையங்களிலும், ஆதார் மையங்களிலும் மணிக்கணக்கில் கூட்டம் நிற்கிறது. இதனால் பொதுமக்களுக்கு தேவையில்லாத அலைக்கழிப்பு, நேரம் வீணடிப்பு போன்றவை நிகழ்கிறது.
இந்தியக் குடிமகன் என்பதற்கு அடையாளமாக வாக்காளர் அட்டை உள்ளது போன்று அனைத்து வயதினருக்கும் அடிப்படை ஆதாரமாக விளங்குகிறது ஆதார் அட்டை. காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்ட ஆதார் அட்டை பா.ஜ.க.ஆட்சியில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது அரசின் அனைத்து நலத்திட்டப் பணிகளுக்கும், அனைத்து அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் ஆதார் கார்டு அவசியமான ஒன்றாகி விட்டது. இதனால் தினந்தோறும் புதிதாக ஆதார் இணைப்பு பணி நடைபெற்று வருகிறது.
தள்ளிப் போன தமிழக வெற்றிக் கழக மாநாடு.. இதான் காரணமா?
அதன்படி ஆதார் கார்டுகள் 10 ஆண்டுகளுக்கு மட்டுமே அதில் உள்ள தகவல்கள் செல்லும் என்பதால் அதனை புதுப்பிக்க மத்திய அரசு காலக் கெடு நிர்ணயித்தது. இதனால் 2014-ல் ஆதாரில் கொடுக்கப்பட்ட விபரங்கள் மாற்றம் இருப்பின் தற்போது கட்டணமின்றி அதனைச் சரிசெய்து கொள்ளும் பொருட்டு செப்டம்பர் 14 -ம் தேதி வரை ஆதார் சரிபார்ப்பு அப்டேட் பணிகளை மேற்கொள்ளலாம் என ஆதார் அமைப்பு தெரிவித்திருந்தது.
தற்போது இந்த கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆதார் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ஆதார் அப்டேட் குறித்த பணிகளை கட்டணமின்றி மேற்கொள்ள வருகிற டிசம்பர் 14-வரை மேற்கொள்ளலாம் என அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு வரும் அனைத்து திருத்தங்களுக்கும் ஆதார் அமைப்பு கட்டணம் நிர்ணயித்துள்ளது.
இனி குறிப்பிட்ட தொகை செலுத்தினால் மட்டுமே ஆதார் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திருத்தம் மேற்கொள்ளும் போது உடன் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை, வங்கிக் கணக்குப் புத்தகம் உள்ளிட்ட ஏதாவது ஒரு ஆவணம் உடன் எடுத்துச் செல்வதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.