‘நாங்கள் விடுதலை அடைந்தோம்’.. விவாகரத்து பெற்ற பெண்கள் நடத்திய சிறப்பு முகாம்.. புதிய புரட்சியை கொண்டாடும் நெட்டிசன்கள்..!

விவாகரத்து என்பது பெரும்பாலும் ஒரு உறவின் முடிவு என்றே பார்க்கப்படும் நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் ரஃபியா அஃபி என்பவர் கேரளாவின் முதல் ‘விவாகரத்து முகாம்’ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்தார். இந்த…

divorce

விவாகரத்து என்பது பெரும்பாலும் ஒரு உறவின் முடிவு என்றே பார்க்கப்படும் நிலையில் கோழிக்கோட்டை சேர்ந்த கன்டென்ட் கிரியேட்டர் ரஃபியா அஃபி என்பவர் கேரளாவின் முதல் ‘விவாகரத்து முகாம்’ ஒன்றை சமீபத்தில் ஏற்பாடு செய்தார். இந்த முயற்சிக்கு இணையத்தில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

‘பிரேக் ஃப்ரீ ஸ்டோரீஸ்’ (Break Free Stories) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த முகாம், விவாகரத்து பெற்ற, அல்லது கணவரை இழந்த பெண்களுக்கு ஒரு பாதுகாப்பான, மகிழ்ச்சியான இடமாக உருவாக்கப்பட்டது. மற்றவர்களுடன் இணந்து தங்கள் கதைகளை பகிர்ந்து கொள்ளவும், மகிழ்ச்சியை மீண்டும் கொண்டு வரவும் உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது. இந்த நிகழ்வில் பல்வேறு வேடிக்கையான மற்றும் மனதுக்கு இதமளிக்கும் நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

முகாமின் வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. அதில், பெண்கள் நடனமாடுவதையும், பாடுவதையும், சிரிப்பதையும், புதிய உறவுகளை உருவாக்குவதையும் காண முடிகிறது. ஒரு உணர்வுபூர்வமான நிகழ்வாக, பெண்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து கொண்டு தனிப்பட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இது மனம்விட்டு, சுதந்திரமாக பேச அவர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்கியது.

இந்த பதிவின் கேப்ஷனில் முகாமின் நோக்கம் அழகாக விவரிக்கப்பட்டுள்ளது: “நாங்கள் குழந்தைகளை போல் சிரித்தோம். போர்வீரர்களை போல் அழுதோம். மலைகளை நோக்கி சத்தமிட்டோம். நட்சத்திரங்களுக்கு கீழ் நடனமாடினோம். யாரும் புரிந்துகொள்ளாத கதைகளை பகிர்ந்து கொண்டோம். அந்நியர்கள் ஆத்ம சகோதரிகளாயினர். தீ மூட்டப்பட்ட இடங்களுக்கும், மனம் உடைந்த நிலைகளுக்கும் இடையில்… நாங்கள் விடுதலை அடைந்தோம்.”

இந்த வீடியோ 45,000 பார்வைகளை கடந்துள்ளது. மேலும், நெட்டிசன்களின் பாராட்டுகளை பெற்று வருகிறது. மக்கள் இந்த முயற்சியை ஊக்கமளிப்பதாகவும், சக்திவாய்ந்ததாகவும், அவசியமானதாகவும் கூறி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

ஒரு பயனர், “இந்த பெண்கள் அற்புதமான தைரியத்தைக் காட்டுகிறார்கள், அவர்களுக்கு என் ஆழ்ந்த மரியாதை!” என்று எழுதினார். மற்றொருவர், “ஒரு கேரளவாசியாக, இது ஒரு சிறந்த முயற்சி என்று நான் உணர்கிறேன். இந்த முகாம்கள் மனதில் காயம் அடைந்தவர்களை குணப்படுத்த முடியும்” என்று கூறினார். மூன்றாவது ஒருவர், “எவ்வளவு அற்புதமான, குணப்படுத்தும் அனுபவம்” என்று பகிர்ந்து கொண்டார். மற்றொரு பயனர், “பெண்கள் மற்ற பெண்களுக்கு உதவுவதை எதுவும் வெல்ல முடியாது. இது மிகவும் தேவைப்பட்டது” என்று மேலும் கூறினார்.

விவாகரத்து பெற்ற பெண்கள் பெரும்பாலும் விமர்சிக்கப்படும் அல்லது ஒதுக்கி வைக்கப்படும் நாட்டில், இந்த முகாம் சமூகம், தன்னம்பிக்கை மற்றும் அக்கறையை வழங்கியுள்ளது. பிரிவுக்கு பிறகும் வாழ்க்கை அன்புடனும், சிரிப்புடனும், புதிய தொடக்கங்களுடனும் நிறைந்திருக்க முடியும் என்பதை இது அனைவருக்கும் நினைவூட்டியுள்ளது.

ரஃபியாவின் இந்த முயற்சி மாற்றத்திற்கான கதவுகளை திறந்து வைத்துள்ளது. இணையத்தில் இவ்வளவு வலுவான வரவேற்பை பெற்றிருப்பதால், இந்தியா முழுவதும் இதுபோன்ற முகாம்கள் அதிகம் உருவாகும் என்று பலர் இப்போது நம்புகின்றனர். பெண்கள் உண்மையிலேயே விவாகரத்து என்ற மனச்சுமையில் இருந்து வெளிவரவும், தங்கள் விருப்பப்படி வாழ்க்கையை கொண்டாடவும் இது போன்ற இடங்கள் அவசியம் என்பதே பலரது கருத்துக்களாக உள்ளது.