பெஹல்காம் தாக்குதல்: ஒரு மோசமான மதிய உணவு.. 11 பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றிய அதிசயம்..

  கொச்சியில் இருந்து பெஹல்காம் வந்த குடும்பம், ஒரு வார விடுமுறை பயணமாக அழகிய பகுதிகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குல்மார்க், சொன்மார்க் பகுதிகளை பார்த்துவிட்டு, ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை பெஹல்காமை நோக்கி பயணித்தனர்.…

family

 

கொச்சியில் இருந்து பெஹல்காம் வந்த குடும்பம், ஒரு வார விடுமுறை பயணமாக அழகிய பகுதிகளை சுற்றிப்பார்த்துக் கொண்டிருந்தனர். ஏற்கனவே குல்மார்க், சொன்மார்க் பகுதிகளை பார்த்துவிட்டு, ஏப்ரல் 22 செவ்வாய்க்கிழமை பெஹல்காமை நோக்கி பயணித்தனர். பேஸரான் மெடோ, பொதுவாக “மினி ஸ்விட்சர்லாந்து” என அழைக்கப்படும் அந்த இடத்தை பார்வையிட திட்டமிட்டிருந்தனர். ஆனால் விதி வேறு திட்டம் போட்டிருந்தது.

“நாங்கள் கடந்த சில நாட்களாக மதிய உணவை தவிர்த்துக்கொண்டு இருந்தோம்,” என குடும்பத்தினருள் ஒருவரான லாவண்யா தெரிவித்தார். “அன்று, பேஸரானுக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு, சற்றே பசிக்க, ஒரு சாலையோர உணவகத்தில் நின்றோம்.”

ஆனால் அங்கு பரிமாறப்பட்ட மட்டன் ரோகன் ஜோஷ், அதிகமாக உப்பாக இருந்ததால், அவர்களால் அதைச் சாப்பிட முடியவில்லை. அவர்கள் முகத்தின் உணர்வுகளை பார்த்த உணவக ஊழியர்கள், அந்த உணவை மறுபடியும் முதலில் இருந்து தயாரிக்கத் தீர்மானித்தனர். இதனால் அந்த குடும்பத்தின் பயணம் சுமார் ஒரு மணி நேரம் தாமதமானது.

அதன்பின் அவர்கள் மீண்டும் தயாரான நல்ல உணவை சாப்பிட்டுவிட்டு பயணத்தை தாமதமாக தொடர்ந்தனர். அவர்கள் பெஹல்காம் நோக்கி சென்று கொண்டிருந்தபோது தான் தாக்குதல் நடந்ததாகவும், சுற்றுலாப் பயணிகள் அலறி ஓடியதையும் பார்த்து, உடனே வண்டியை திருப்பிவிட்டனர்.

நாங்கள் தப்பித்ததை எந்த வார்த்தைகளாலும் சொல்ல முடியவில்லை. எல்லோருடைய முகங்களில் தெரிந்த பயம் எங்களுக்கு பெரிய எச்சரிக்கையாக இருந்தது” என்று லாவண்யா கூறினார்.

இருப்பினும், உள்ளூர் டிரைவர் இதைப் பற்றி அதிகமாக எண்ணவில்லை, வழக்கமான குழப்பம் என நினைத்தார். ஆனால் அந்த குடும்பம் தங்களது உள்ளுணர்வை நம்பி பின்னோக்கி திரும்பினர். பின்னர் ஒரு ஏரியின் அருகே ஓய்வெடுத்து, ரிசார்ட்டிற்கு மீண்டும் சென்றனர். அங்கு கடைதாரர்கள் “இங்கே பதற்றம் அதிகமாய் இருக்கிறது” என கூறி பகுதியை விட்டு வெளியேற வேண்டுமென அறிவுறுத்தினார்கள்.

அதன்பின் மாலை 4.30 மணிக்கு பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இந்து சுற்றுலாப் பயணிகள் குறிவைக்கப்பட்டனர், சிலர் அருகில் இருந்து சுட்டுக்கொல்லப்பட்டனர். 26 பேர் உயிரிழந்தனர் என்பது அந்த குடும்பத்திற்கு தெரிய வந்தது.

அந்த உணவு மட்டும் தாமதமின்றி எங்களுக்கு கிடைத்திருந்தால் நாங்களும் அந்த தாக்குதலில் சிக்கிய்ருப்போம், எங்களுக்கு என்ன வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம் என்று லாவண்யா கூறினார்.

ஒரு மோசமான மதிய உணவு, ஒரு குடும்பத்தின் உயிரை காப்பாற்றிய அதிசயம் அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.