ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் பெரும்பாலும் இளைஞர்களால் தொடங்கப்பட்டு, வாழ்க்கையில் முன்னேறி வருவதை காண்கிறோம். ஆனால், 75 வயதில் ஒரு பெண் ஸ்டார்ட்அப் ஆரம்பித்து, முதல் நாள் வெறும் 450 ரூபாய் மட்டுமே விற்பனை செய்த நிலையில், கடமையுடனும் மன உறுதியுடனும் போராடி தனது தொழிலை வளர்ச்சி அடையச் செய்த நிலையில், இன்று அவருக்கு மாத வருமானம் 3 லட்சம் வருகிறது என்பது ஒரு மிகப்பெரிய ஆச்சரியமாக உள்ளது.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த 75 வயதுப் பெண்மணி ஒருவர், வீட்டில் இருந்து உணவு தயாரித்து விற்பனை செய்யும் ஒரு சிறு கடையை ஆரம்பித்தார். முதல் நாள் அவரது விற்பனை வெறும் 450 ரூபாய் தான். ஆனாலும் அவர் நம்பிக்கையை இழக்கவில்லை. தொடர்ந்து தினந்தோறும் அவர் உணவு தயாரித்து விற்பனை செய்தார். “நல்ல தரமான உணவு, வாங்கி சாப்பிடுபவர்கள் திருப்தியாக இருக்க வேண்டும்” என்பது மட்டுமே அவரது குறிக்கோளாக இருந்தது. அதன் பின்னர், நாளடைவில் அண்டை வீட்டார், பக்கத்து வீட்டார், நண்பர்கள் மற்றும் ஆன்லைன் மூலம் ஆர்டர்கள் வர தொடங்கி, மூன்று மாதங்களுக்குள் அவரது மாத வருவாய் 2 லட்சமாக மாறிவிட்டது. இன்று அவரது வணிகம் மாதத்திற்கு மூன்று லட்சம் சம்பாதித்து கொடுக்கிறது என்பதும், இதில் 70% ஆர்டர்கள் ஆன்லைனில் இருந்து பெறப்படுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
காலை 5 மணிக்கு எழுந்து அன்றைய நாளுக்கான உணவுகளைத் தயாரிக்க தொடங்கிவிடுவார். மதியத்திற்குள் எல்லா பணிகளையும் முடித்துவிடுவார். மாலையில் மீண்டும் பரபரப்பில் ஈடுபடுவார். ஓய்வு இல்லை. ஞாயிற்றுக்கிழமை கூட விடுமுறை இல்லை. 75 வயதிலும் அவர் உண்மையான உழைப்பை நம்பினார். அவரது உணவின் ருசிக்காகவே அவருக்கு ஆர்டர்கள் குவிந்து வருகிறது. அந்த பகுதியில் உள்ள பெரும்பாலானோர் வீட்டில் சமைப்பதையே மறந்துவிட்டு, மூன்று வேளையும் அவரிடம் வாங்கி சாப்பிடுவதாக பெருமையாகக் கூறி வருகின்றனர். “விலை குறைவு, தரம் அதிகம்” என்றும், “ஒரு ஸ்டார் ஹோட்டலில் சாப்பிட்ட திருப்தி இருக்கிறது” என்றும் பலர் அவரிடம் உணவு வாங்கி சாப்பிட்டவர்கள் பெருமையுடன் பேசி வருகிறார்கள்.
ஒருமுறை அவர் ’மாஸ்டர் செஃப் இந்தியா’ நிகழ்ச்சிக்கு விண்ணப்பித்தார் என்றும், ஆனால் அவரை நிர்வாகிகள் தேர்வு செய்யவில்லை என்றும் கூறப்படுகிறது. இது குறித்து அவரிடம் கேட்டபோது, “அவர்கள் என்னை நம்பவில்லை என்றாலும் பரவாயில்லை. நான் அந்த நிகழ்ச்சியை மகிழ்ச்சியுடன் பார்த்து அனுபவிக்கிறேன்” என்று சாதாரணமாக பேசினார். பெரிய தொழில்நுட்பம் இல்லை, குழுக்கள் இல்லை, இணை நிறுவனர் இல்லை, CEO இல்லை. ஆனால், ஓய்வு பெறும் வயதையும் தாண்டிவிட்ட ஒரு தனி பெண்மணி இந்த உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார் என்றால், அது மிகப்பெரிய ஆச்சரியமாகத்தான் பார்க்கப்படுகிறது.
இவர் தனது வணிகத்தை மிகப்பெரிய அளவில் நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற திட்டங்கள் எல்லாம் இல்லை. “என்னால் எவ்வளவு முடிகிறதோ அவ்வளவு சமைக்கிறேன்” என்று புன்னகையுடன் கூறுகிறார். இப்போதைக்கு உள்ளூர் வணிகம் மட்டும் போதும் என்றும், பிற நகரங்களிலோ மாநிலங்களிலோ கிளைகள் போடும் எண்ணம் எதுவும் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 75 வயதில் ஒரு ஸ்டார்ட்அப் தொடங்கி, அதை வெற்றிகரமாக நடத்தி, ஒவ்வொரு மாதமும் 3 லட்சத்துக்கும் அதிகமாக சம்பாதிக்கும் இவர், இன்றைய இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக உள்ளார் என்றால், அதில் மிகை இல்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
