உழைச்சு சாப்பிடுறதே மேல்.. மகனால் வந்த தலைவலி.. 55 வயசுல ஆட்டோ ஓட்டும் தாய்.. இன்ஸபிரேஷனல் ஸ்டோரி..

By Ajith V

Published:

கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் வெளியான கேஜிஎஃப் படத்தின் இரண்டு பாகங்களும் இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் அதிக அங்கீகாரத்தை பெற்றிருந்தது. அந்த அளவுக்கு பிளாக்பஸ்டர் திரைப்படமாக அமைந்துள்ள கேஜிஎஃப் முதல் பாகத்தில் ‘இந்த உலகத்துல தாயை விட சிறந்த சக்தி இல்ல’ என்ற ஒரு வசனத்தை யாஷ் பேசியிருப்பார்.

இன்றளவிலும் இந்த வசனம் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்பட்டு வரும் சூழலில், அதற்கு நிஜமான ஒரு கதை தான் சமீபத்தில் அரங்கேறியுள்ளது. நம்மிடம் ஏதாவது குறைகள் இருக்கும் போது அதனை மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக நாம் பார்ப்போம். ஆனால் நம்மை விட கஷ்டப்படும் ஒரு நபரை பார்க்கும் போது நமது பிரச்சனை எல்லாம் அவர்கள் முன் கால் தூசி போல தோன்றி விடும்.

கிட்டத்தட்ட 55 வயது பெண்மணி ஒருவர் சந்தித்து வரும் பிரச்சனைகளும் அப்படித்தான். சமீபத்தில் ஆயுஷ் கோஸ்வாமி என்ற நபர் ஒருவர் 55 வயதில் பெண் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் குறித்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இந்த வீடியோவில் வரும் காட்சிகளின் படி அந்த 55 வயதாகும் பெண் தினந்தோறும் மாலை முதல் இரவு நேரம் வரை ஆட்டோ ஓட்டி வருகிறார்.

இவருக்கு ஒரே ஒரு மகன் மட்டும் இருக்கும் நிலையில் அவர் தாய்க்கு எந்த விதத்திலும் உதவவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் தனது வீட்டில் இருக்கும் சூழல்கள் மிக கடினமாக இருப்பதால் அங்குள்ள வேலைகள் அனைத்தும் முடித்துவிட்டு மாலை நேரம் ஆட்டோ ஓட்டவும் அந்த பெண்மணி கிளம்பி விடுகிறார். தனது மகன் பற்றி பேசும் அவர், ‘எனக்கு ஒரு மகன் உள்ளார். அவர் எந்த வேலைக்கும் செல்வதில்லை. ஆனால் என்னிடம் இருக்கும் பணம் அனைத்தையும் சண்டை போட்டு வாங்கி விடுவார்.

அவர் என்னை ஒரு தாயாக கூட மதிக்கவில்லை. என்னால் என்ன சொல்ல முடியும்?. இதனால் பிச்சை எடுப்பதை விட வேலை பார்ப்பதே மேல்” என குறிப்பிட்டுள்ளார். 55 வயதில் நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் தாய்க்கு உதவாத மகனை பலரும் திட்டி தீர்த்து வரும் அதே வேளையில் இந்த பெண்மணியின் செயல் தொடர்பாக பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதுடன் நிச்சயம் அவரது வாழ்க்கையும் மாறி அவரது பிரச்சனைகள் அனைத்தும் சரியாகிவிடும் என வாழ்த்தி வருகின்றனர்.

அது மட்டுமில்லாமல் சிறிய பிரச்சனைகள் தங்கள் முன் இருக்கும் போது துவண்டு போயிருக்கும் பலருக்கும் இந்த பெண்மணியின் கதை நிச்சயம் ஒரு இன்ஸ்பிரேஷன் ஸ்டோரி தான்.