25 மாணவர்களின் எதிர்காலத்தை குழி தோண்டி புதைத்தாரா துணை முதல்வர்? பெற்றோர் ஆத்திரம்..!

  ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன ஊர்வலம் காரணமாக, JEE தேர்வு எழுத சென்ற மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 25 மாணவர்கள்…

student

 

ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் பவன் கல்யாணின் வாகன ஊர்வலம் காரணமாக, JEE தேர்வு எழுத சென்ற மாணவர்கள் சரியான நேரத்திற்கு தேர்வு மையத்திற்கு செல்ல முடியவில்லை. இதனால் 25 மாணவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்படாததால், அவர்களது எதிர்காலம் குழி தோண்டி புதைக்கப்பட்டதாக பெற்றோர்கள் ஆவேசமாக ஊடகங்களுக்கு பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025 ஆம் ஆண்டுக்கான JEE நுழைவு தேர்வு எழுத வந்த மாணவர்கள் சரியான நேரத்தில் தேர்வு மையத்தை அடைய முடியாமைக்கு காரணம், துணை முதல்வரின் வாகன ஊர்வலமே என கூறப்படுகிறது. அந்த ஊர்வலத்தின் காரணமாக போக்குவரத்து கட்டுப்பாடுகள் ஏற்பட்டதினால், தேர்வு எழுத சென்ற மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்ததாக கூறப்படுகிறது.

ஒரு மாணவரின் தாயார், “நாங்கள் போக்குவரத்தில் சிக்கிக் கொண்டோம். போக்குவரத்து தடை செய்யப்பட்டதால், போலீசார் எங்களை நிறுத்தினர். ஊர்வலத்திற்காக சாலையில் போக்குவரத்து அனுமதிக்கப்படவில்லை” என்று கூறினார். மேலும், “நாங்கள் காலை 7.50க்கு தேர்வு மையத்திற்கருகே வந்துவிட்டோம். ஆனால் தேர்வு மையம் வரை செல்வதற்கு எங்களுக்கு 45 நிமிடங்கள் ஆகிவிட்டன. தாமதமானதால், என் மகன் தேர்வு எழுத அனுமதிக்கப்படவில்லை” என்றும் தெரிவித்தார்.

இதுபோல் சுமார் 25 மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஒரு மாணவியின் பெற்றோர், “இரண்டு நிமிடம் தாமதமாக வந்ததால் என் மகள் தேர்வு எழுத முடியவில்லை. ஐந்து நிமிடங்களுக்கு முன்பே வந்திருந்தால், என் மகள் தேர்வு எழுதி இருப்பார்” என்று தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் சமூக வலைதளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவு செய்து வருகின்றனர். “தேர்வு எழுத முடியாததால், ஒரு வருடம் தயார் செய்தது வீணாகிவிட்டது. மாணவர்களின் எதிர்காலமே குழி தோண்டி புதைக்கப்பட்டுள்ளது” என்று சிலர் ஆவேசமாக பதிவிட்டுள்ளனர்.

ஆனால், இந்த விவகாரம் குறித்து விசாகப்பட்டினம் போலீசார் வெளியிட்ட அறிக்கையில், “துணை முதல்வர் அந்த பகுதியில் காலை 8.41 மணிக்கே பயணம் செய்தார். ஆனால், தேர்வு எழுதும் மாணவர்கள் காலை 7.00 மணிக்கே வந்து பதிவு செய்ய வேண்டும். எனவே, துணை முதல்வரின் வாகன ஊர்வலத்திற்கும் மாணவர்களின் தாமதத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் ஆந்திராவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.