இன்று ஒரே நாளில் ரூ.20000000000000 காலி.. 37 வருடங்களுக்கு பின் மீண்டும் Black Monday..!

  இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் “Black Monday” நாள் உருவாகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க…

black monday1

 

இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத சரிவை சந்தித்த நிலையில், 37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் “Black Monday” நாள் உருவாகி இருப்பதாக கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உலக நாடுகளுக்கு எதிரான வரி விதிப்பை அறிவித்த நிலையில், இந்திய பங்குச்சந்தைகள் உட்பட உலகளாவிய பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. நிஃப்டி 50 மற்றும் சென்செக்ஸ் ஆகிய இரண்டும் கடும் சரிவை கண்டுள்ளன. இந்த சரிவுக்கு காரணம் உலகளாவிய பொருளாதார சிக்கல்கள் தான் என்று கூறப்படுகிறது.

இன்று காலை சென்செக்ஸ் ஐந்து சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. உலக சந்தையில் ஏற்பட்ட முரண்பாடுகள் மற்றும் வர்த்தக போர் அச்சுறுத்தலால், பங்குச் சந்தையில் இருந்து ஏராளமான முதலீட்டாளர்கள் வெளியேறி வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவு இதுதான் என்றும் குறிப்பிடப்படுகிறது. இந்திய பங்குச்சந்தை மட்டுமன்றி, ஹாங்காங், டோக்கியோ, ஷாங்காய், தென் கொரியா ஆகிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் 5 முதல் 11 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தையும் சுமார் 6 சதவீதம் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளது. ஜப்பான், தாய்லாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பங்குச்சந்தைகளும் மிக மோசமாக சரிந்து உள்ளன.

இந்த நிகழ்வை கட்டுப்படுத்த அரசு பொருளாதார சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்றும், டிரம்ப் அரசின் அறிவிப்புகளால் ஏற்பட்ட பதட்டத்தை தணிக்கும் சூழ்நிலைகளை ஏற்படுத்த வேண்டும் என்றும் பங்குச்சந்தை வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

எனினும், இந்த சரிவு இன்னும் சில வாரங்கள் அல்லது மாதங்கள் தொடரும் என்றும் கூறப்படுகிறது. இந்த சரிவின் காரணமாக, இந்திய முதலீட்டாளர்கள் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.