பிரதமர் மோடியை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என முடிவெடுத்திருந்த பாஜக தொண்டர் ஒருவர், 14 ஆண்டுகளாக தனது விரதத்தை பின்பற்றி வந்தார். தற்போது, அவர் பிரதமரை சந்தித்து, மோடியே அவருக்கு செருப்பு அணிவித்து வைத்த நெகிழ்ச்சியான தருணமாக மாறியுள்ளது.
கடந்த 2010ஆம் ஆண்டு, ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ராம்பால் காஷ்யப் என்பவர், “நரேந்திர மோடி பிரதமராக வேண்டும்; பிரதமரான பின் அவரை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன்” என தீர்மானித்தார். பின்னர், 2011ஆம் ஆண்டு மோடி பிரதமராக பதவியேற்றாலும், ராம்பால் அவரை நேரில் சந்திக்க பலமுறை முயற்சி செய்தும், அது பலிக்கவில்லை.
இந்த நிலையில், நேற்று ஹரியானாவின் யமுனா நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், ராம்பால் காஷ்யப் பிரதமர் மோடியை நேரில் சந்தித்தார். மிக முக்கியமாக, பிரதமரே அவருக்கு செருப்பு அணிவித்து, அவரது 14 ஆண்டுகளாக இருந்த விரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தார்.
இது குறித்து பிரதமர் மோடி தமது சமூக வலைதளங்களில் பதிவிட்ட உரையில், “இன்று ஹரியானாவின் யமுனா நகரில் ராம்பால் காஷ்யப் என்ற தொண்டரை சந்தித்தேன். 14 ஆண்டுகளுக்கு முன்பு, நான் பிரதமராகி, என்னை நேரில் சந்திக்கும் வரை செருப்பு அணிய மாட்டேன் என அவர் விரதம் எடுத்திருந்தார். இன்று அவருக்காக நான் செருப்பு அணிவிக்க முடிந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், இப்படிப்பட்ட நம்பிக்கையுடன் இருக்கும் தொண்டர்கள், மக்கள் நலனுக்காகவும், சமூக சேவைக்காகவும் கூட விரதம் எடுக்க வேண்டும்’ என குறிப்பிட்டார்.
ராம்பால் காஷ்யப் கடந்த 14 ஆண்டுகளில் தனது குடும்பத்தினரின் முழு ஒத்துழைப்புடன் விரதத்தை பின்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது, தனது விரதம் முடிவடைந்ததை தொடர்ந்து, அவர் மகிழ்ச்சியுடன் இருப்பது பெரும் பரவசத்தை ஏற்படுத்தியுள்ளது.