மத்திய அரசின் கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) உயர்கல்வியில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ளும் பொருட்டும், நாட்டின் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு ஆகும்.
உயர்கல்வித்துறையில் முடிவுகளை இந்த யுஜிசியே மேற்கொள்கிறது. கடந்த மாதம் இனி வருடத்திற்கு இரண்டு முறை கல்லூரிகள் மாணவர் சேர்க்கை முறையைப் பின்பற்றலாம் எனவும் அதற்கான நெறிமுறைகளையும் வெளியிட்டிருந்தது. தற்போது பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனத்தில் புதிய நடைமுறையை கொண்டு வரவுள்ளதாக நெறிமுறையை அறிவித்துள்ளது யுஜிசி.
அதிர்ந்த மதுரை.. டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக 11 கிராம மக்கள் திரண்ட பேரணி..
வழக்கமாக பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் கல்வியில் சிறந்து விளங்குபவர்களின் பெயர்கள் ஆளுநரின் சிபாரிசுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்படி மாநில ஆளுநர்கள் பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் நடைமுறைதான் தற்போது வரை இருந்து வருகிறது.
குறிப்பாக கல்வியாளர்கள் மட்டுமே இதுவரை துணைவேந்தர்களாகப் பதவி வகித்து வந்தனர். இனி இந்த நடைமுறையை மாற்ற உள்ளதாக யுஜிசி-யின் புதிய நெறிமுறைகளை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்டுள்ளார்.
இந்த புதிய நெறிமுறையின்படி பல்கலைக்கழகங்களில் இனி கல்வித்துறை சாராத தொழில்துறை நிபுணர்கள், பொதுத்துறையைச் சார்ந்தவர்கள் போன்றோரையும் துணை வேந்தர்களாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அதிகாரம் மாநில ஆளுநர்களுக்கு வழங்கும் வகையில் யுஜிசி விதிமுறைகளில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
மத்திய அரசின் இந்த திடீர் முடிவால் இனி பேராசிரியர்கள் மட்டுமல்லாமல் இதர துறை சார்ந்தவர்களும் துணைவேந்தராகும் சூழல் உருவாகி உள்ளது.
இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் “புதிய UGC விதிமுறைகள் VC நியமனங்கள் மீது ஆளுநர்களுக்கு பரந்த கட்டுப்பாட்டை வழங்குவது மற்றும் கல்வியாளர்கள் அல்லாதவர்கள் இந்தப் பதவிகளை வகிக்க அனுமதிப்பது ஆகியவை கூட்டாட்சி மற்றும் மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும். மத்திய பாஜக அரசின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை, அதிகாரத்தை மையப்படுத்தவும், ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தவும் முயல்கிறது. பாஜக அரசின் கட்டளைப்படி செயல்படும் ஆளுநர்களால் கட்டளையிடப்படாமல், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளில் கல்வி இருக்க வேண்டும்.
அதிக எண்ணிக்கையிலான உயர்மட்ட உயர்கல்வி நிறுவனங்களைக் கொண்டு தேசத்தில் முன்னணியில் இருக்கும் தமிழ்நாடு, நமது நிறுவனங்களின் சுயாட்சி பறிக்கப்படுவதால் அமைதியாக இருக்காது.
கல்வி என்பது நமது அரசியலமைப்புச் சட்டத்தில் ஒருங்கிணைந்த பட்டியலின் கீழ் உள்ள ஒரு பாடமாகும், எனவே யுஜிசி இந்த அறிவிப்பை ஒருதலைப்பட்சமாக வெளியிடுவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று நாங்கள் கருதுகிறோம். இந்த அத்துமீறலை ஏற்க முடியாது, தமிழகம் சட்ட ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் போராடும்.” என்று தனது கண்டனத்தை பதிவு செய்திருக்கிறார்.
இது உயர்கல்வியில் குழப்பத்தினை ஏற்படுத்தும் விதமாக அமையும் என கல்வியாளர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.