ஜியோ உள்பட உள்பட பல வெற்றிகரமான நிறுவனங்களை நடத்தி வரும் ரிலையன்ஸ் தற்போது கணினி தயாரிப்பு தொழிலில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடந்த ஒரு கூட்டத்தில் ஆகாஷ் அம்பானி புதிய திட்டம் ஒன்றை கூறினார். இந்த திட்டத்தின்படி, விரைவில் Cloud PCதயாரிக்கும் முடிவில் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.
இந்தியாவின் முன்னணி மொபைல் தொழில் நிறுவனமாக ஜியோ இருக்கும் நிலையில், தற்போது கூடுதலாக சில தொழிலில் இறங்க இருப்பதாக ஆகாஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் மொபைல் போன் பரவலாக பிரபலம் அடைந்தாலும், கணினி விற்பனை இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளது. சமீபத்தில் வெளியான ஆய்வு அறிக்கையின்படி, 2024 ஆம் ஆண்டின் மூன்றாவது காலாண்டில் இந்தியாவில் மட்டும் 4.49 மில்லியன் கம்ப்யூட்டர்கள் விற்பனை செய்யப்பட்டன. இது ஒரு சாதனையாக இருந்தாலும், உலக அளவில் இது வெறும் 6.8 சதவீதம் மட்டுமே உள்ளது. கணினி விற்பனை இந்தியாவில் மிகவும் குறைவாக இருக்கும் நிலையில், அதை அதிகரிக்க Cloud PC கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இது இந்தியாவில் மிகப்பெரிய சந்தையாக மாறும் என்றும் ஆகாஷ் அம்பானி கூறியுள்ளார்.
இந்த தொழில்நுட்பம் லட்சக்கணக்கான பயனர்களை சென்றடையும் என்றும், மேலும் குறைந்த விலையில் இந்த Cloud PC கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அது மட்டும் இன்றி, இந்த Cloud PC செயல்பாட்டுக்கு வந்தால், இதற்கான டெவலப்பர்கள் அதிக அளவில் தேவைப்படுவார்கள் என்றும், வேலைவாய்ப்பும் பெருகும் என்றும் அவர் கூறினார்.
மற்ற சாதாரண கணினிகளை விட 30% விலை குறைவாக Cloud PC இருக்கும் என்றும் அவர் உறுதி கூறியுள்ளார். இந்த கணினி விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையில், இது கணினி துறையில் ஒரு புதிய புரட்சியை உண்டாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.