ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்று, தங்கள் குழந்தை இறந்ததை மறைத்து, பல நாட்களாக வென்டிலேட்டரில் வைத்திருந்ததாக பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால், மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது.
ராஞ்சி துணை ஆணையர் மஞ்சுநாத் பஜந்த்ரி, இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூன்று பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளார். “குழந்தை இறந்த பிறகும், உடல் அழுக தொடங்கும் வரை வென்டிலேட்டரில் வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. உடல் துர்நாற்றம் வீசியதாகவும், பெற்றோர்கள் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர்.
ஜூலை 4-ஆம் தேதி பிறந்த குழந்தை, மூச்சுத் திணறல் அறிகுறிகளுடன் ஜூலை 8-ஆம் தேதி லிட்டில் ஹார்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. குழந்தையின் தந்தை முகேஷ் சிங், தனது குழந்தையை பார்க்க அனுமதிக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார். சுமார் ₹3 லட்சம் கடன் வாங்கி சிகிச்சை அளித்ததாகவும் அவர் கூறினார். ஜூலை 12-ஆம் தேதி, குழந்தை உயிருடன் இருப்பதாக ஒரு வீடியோவை மருத்துவமனை அனுப்பியது. ஆனால், இரண்டு நாட்களுக்கு பிறகு அதே வீடியோ மீண்டும் அனுப்பப்பட்டதால் அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
“குழந்தையின் நிலையை நேரில் பார்க்க ஒருபோதும் அனுமதிக்கப்படவில்லை. நாங்கள் பார்க்க வேண்டும் என்று கேட்கும்போது, ‘வீக்கம்’ ஏற்பட்டதாக கூறி, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வீடியோக்களை அனுப்பினர்” என்று முகேஷ் கூறினார். ஜூலை 30-ஆம் தேதி உடல் வீங்கி, துர்நாற்றம் வீசிய நிலையில் குழந்தையை ஒப்படைத்ததாகவும், அது பல நாட்களுக்கு முன்பே இறந்துவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மருத்துவமனையின் டாக்டர் சத்யஜீத் குமார் செய்தியாளர் சந்திப்பில், “குழந்தை ஜூலை 30-ஆம் தேதி மருத்துவமனையிலிருந்து நேற்று வரை உயிருடன் இருந்தது. மருத்துவமனை, குழந்தையின் மரணத்தை மறைக்கவில்லை” என்று தெரிவித்தார்.
குழந்தையை ஒப்படைத்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் மருத்துவ கருவி ஸ்கிரீன் ஷாட்களை அவர் காண்பித்தார். ஜூலை 30 வரை குழந்தையின் உடலில் உயிரின் அறிகுறிகள் இருந்தன என்றும், உடல் அழுகும் நிலையில் இல்லை என்றும் கூறினார்.
குழந்தையை வீட்டிற்கு அழைத்து செல்ல வேண்டாம் என்று எச்சரித்தும், பெற்றோர் வற்புறுத்தியதால், விதிமுறைகளை முடித்து குழந்தையை உயிருடன் ஒப்படைத்ததாக அவர் தெரிவித்தார்.
ஜார்க்கண்ட் எதிர்க்கட்சித் தலைவர் பாபுலால் மராண்டி, இந்த சம்பவத்தை “மனிதாபிமானமற்ற செயல்” என்று கடுமையாக விமர்சித்துள்ளார்.
விஜயகாந்த் நடித்த ரமணா திரைப்படத்தில் இறந்த ஒருவருக்கு பல நாட்கள் சிகிச்சை அளிக்கும் காட்சி வருவது போல் இந்த சம்பவம் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட் பகுதியில் இது வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
