அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு அதிக வரி விதித்துள்ள நிலையில், இந்திய வேளாண் சந்தையில் அமெரிக்கா சில முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. இந்த கோரிக்கைகள், இந்தியாவின் விவசாய கொள்கைகளுக்கும் உள்நாட்டு விவசாயிகளின் நலன்களுக்கும் பெரும் சவாலாக அமையலாம் என்று கூறப்படுகிறது.
பால் பொருட்களுக்கு வரி இல்லை:
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பால் பொருட்களுக்கு இந்திய சந்தையில் பூஜ்ஜிய வரி அணுகலை அமெரிக்கா கோருகிறது. இது, இந்தியாவின் மிகப்பெரிய பால் உற்பத்தித் துறையை நேரடியாக பாதிக்கும்.
பல்வேறு பொருட்களுக்கு சந்தை அனுமதி:
பால் பொருட்கள், கோழி இறைச்சி, சோளம், சோயாபீன்ஸ், அரிசி, கோதுமை, எத்தனால், சிட்ரஸ் பழங்கள், பாதாம், ஆப்பிள், பெக்கான், திராட்சை, பதிவு செய்யப்பட்ட பீச் பழங்கள், சாக்லேட், குக்கீஸ், மற்றும் உறைந்த பிரெஞ்சு ஃப்ரைஸ் போன்ற பல்வேறு வகையான பொருட்களுக்கு இந்திய சந்தையில் தடையற்ற நுழைவை அமெரிக்கா எதிர்பார்க்கிறது.
இந்தியாவின் அதிக வரி:
தற்போது, இந்தியா வேளாண் பொருட்களுக்கு 40% வரை அதிக வரி விதித்து வருகிறது. இது உள்நாட்டு விவசாயிகளை பாதுகாக்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாகும்.
இந்தியாவின் நிலைப்பாடு:
இந்தியா நீண்ட காலமாக விவசாயம், பால் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கான சந்தை அணுகலை கட்டுப்படுத்தி வருகிறது. இதற்கான காரணம், உணவு பாதுகாப்பு, விவசாயிகளின் வாழ்வாதாரம் மற்றும் உள்நாட்டு கிராமப்புற பொருளாதாரத்தின் ஸ்திரத்தன்மை குறித்த கவலைகளே ஆகும்.
புதிய சவால்கள்:
அமெரிக்காவின் இந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டால், இந்தியாவின் விவசாய துறையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படும். குறிப்பாக, பூஜ்ஜிய வரி விதிப்பு, இந்தியாவின் பால் உற்பத்தி மற்றும் கோழி வளர்ப்புத் துறையில் கடும் போட்டியை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பிரம்மாண்ட வேளாண் உற்பத்திக்கு ஈடுகொடுப்பது இந்திய விவசாயிகளுக்குக்கடினமானதாக இருக்கும்.
அமெரிக்காவின் இந்த அணுகுமுறை, இரு நாடுகளுக்கும் இடையேயான வர்த்தக பேச்சுவார்த்தைகளில் புதிய அழுத்தத்தை உருவாக்கும். இந்தியாவின் நலன்களை பாதுகாத்து, உள்நாட்டு விவசாயிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் ஒரு சமரசத்தை எட்டுவது மத்திய அரசுக்கு ஒரு பெரிய சவாலாக இருக்கும்.
அமெரிக்காவின் அராஜக போக்கிற்கு இந்தியா விரைவில் முடிவு கட்டும் என அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா மீது வரி விதித்தது தொடங்கி, அதன் உணவு பொருட்களை இந்திய சந்தையில் திணிக்க முயற்சிப்பது வரை, அமெரிக்காவின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந்திய இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறப்படுகிறது. “இந்திய மக்கள் என்ன சோதனை செய்யப்படும் எலிகளா?” என்று சமூக வலைத்தளங்களில் பொதுமக்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் பிரதமர் மோடி அமெரிக்காவின் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு இந்தியாவில் இடமில்லை என்பதை உறுதிபட கூறிவிட்டார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் டாலர் ஆதிக்கத்தை குறைக்கும் வகையில், பிரிக்ஸ் நாடுகள் அனைத்தும் ஒன்றிணைந்து தங்கள் சொந்த கரன்சிகளில் வர்த்தகம் செய்ய வேண்டும் என்று பிரதமர் மோடி எடுத்துவரும் முயற்சிகள், அமெரிக்காவிற்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்காவின் அராஜக போக்கிற்கு முடிவுகட்ட, மோடி ‘பூனைக்கு மணி கட்ட’ முயற்சிக்கிறார் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பணியாமல், இந்தியா தனது சொந்த பலத்தை நிரூபிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
