உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினங்களுக்கும் அடிப்படை தேவையாய் அத்தியாவசிய தேவையாய் இருக்கும் பொருள் உணவு. உயிரினங்களின் வளர்ச்சிக்கும் வாழ்வுக்கும் உணவு மிகவும் முக்கியம்.
மூன்று வேளை உணவு உண்ணுதல் எவ்வளவு முக்கியமோ அதை விட முக்கியம் நாம் என்ன உண்கிறோம் என்பதுதான்.
நாம் உட்கொள்ளும் உணவு எந்தவித கலப்படமும் இல்லாத உணவாக இருக்கிறதா? நாம் உண்ணும் உணவு சுகாதாரத்துடன் ஆரோக்கியமானதாகவும் இருக்கிறதா? என்ற விழிப்புணர்வு ஒவ்வொருவருக்கும் அவசியம்.

இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஐநா சபையினால் 2018 ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு தினம் கொண்டுவரப்பட்டது. 2019 ஆண்டில் இருந்து ஜூன் 7 இந்த உணவு பாதுகாப்பு தினத்தை கொண்டாட உலக சுகாதார அமைப்பு மற்றும் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு சேர்ந்து இந்த நாளை கடைபிடிப்பதில் உதவி புரிகிறது.
உணவு பாதுகாப்பு என்பது உணவை தயாரிக்கும் முறை, அதை கையாளும் முறை, அதை எப்படி சேமித்து வைக்கிறோம் என்னும் முறை இப்படி அனைத்தையும் சார்ந்தது. உணவு எப்படி மருந்தாக செயல்படுகிறதோ அதேபோல் ஆரோக்கியம் இல்லாத உணவு நம் உடலுக்கு பல்வேறு தீங்குகளை வரவழைக்கும்.ஒரு வேளை உணவு சரியாக இல்லாவிட்டால் கூட வாந்தி, மயக்கம் , காய்ச்சல், வயிற்றுப் போக்கு போன்ற பல இன்னல்கள் நம் உடலில் வந்து நம்மை அவதியுற செய்து விடும். சுகாதாரமற்ற உணவு அனைத்து வயதினருக்கும் நோய்களை ஏற்படுத்தினாலும் இது குழந்தைகளையும் முதியவர்களையும் அதிக பாதிப்பிற்கு உள்ளாக்குகிறது.

இந்த உணவு பாதுகாப்பு தினம் ஆனது உணவின் மூலம் பரவும் நோய்கள் பற்றிய விழிப்புணர்வையும் அந்த நோய்களை தடுப்பதை பற்றிய விழிப்புணர்வையும் மக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டது.
அதுமட்டுமின்றி உணவு என்பது ஒரு நாட்டின் பொருளாதாரத்தோடு சம்மந்தப்பட்டது. உணவு சார்ந்த விவசாயத்தின் மூலம் ஏற்படும் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி மேலும் உணவுப் பொருட்களை சந்தைப்படுத்துதல் போன்ற நோக்கங்களையும் வலியுறுத்த கொண்டு வரப்பட்டது இந்த உணவு பாதுகாப்பு தினம்.

இன்றைய பாதுகாப்பான உணவு தான் நாளைய ஆரோக்கியமான சந்ததிகளுக்கு வழிவகுக்கும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
உணவைப் பாதுகாப்போம்! ஆரோக்கியமாய் வாழ்வோம்!
நான் சௌமியா. எப்பொழுதும் எழுதுவதில் அதிக ஆர்வம் உண்டு. சில ஆண்டுகளாக டிஜிட்டல் மீடியாவில் எழுதி வருகிறேன். தற்போது தமிழ் மினிட்ஸ் ஊடகத்திற்காக கட்டுரைகள் எழுதிக் கொண்டு இருக்கிறேன். குறிப்பாக வாழ்க்கை முறை, சமையல், ஆன்மீகம் சார்ந்த தலைப்புகளில் கட்டுரைகள் எழுதுவதில் ஆர்வம் அதிகம்.

