வயிற்று புண்களை ஆற்றும் அகத்திக்கீரை பொரியல் -பாரம்பரிய சமையல்

வாய் புண், வயிற்று புண்களை ஆற்றுவதில் மணத்தக்காளி கீரையும், அகத்திக்கீரையும் சளைத்ததில்லை. உடல்சூட்டை அகத்திக்கீரை தணிக்கும். காய்ச்சலின்போது அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டால் காய்ச்சல் தணியும். குடல் புண்ணை ஆற்றும், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும்.…

வாய் புண், வயிற்று புண்களை ஆற்றுவதில் மணத்தக்காளி கீரையும், அகத்திக்கீரையும் சளைத்ததில்லை. உடல்சூட்டை அகத்திக்கீரை தணிக்கும். காய்ச்சலின்போது அகத்திக்கீரையை சமைத்து சாப்பிட்டால் காய்ச்சல் தணியும். குடல் புண்ணை ஆற்றும், வயிற்றில் உள்ள பூச்சிகளை அழிக்கும். இதை வாரத்திற்கு ஒருநாள் சமைத்து சாப்பிடலாம். ஆனால், தர்ப்பணம், அமாவாசை மாதிரியான பித்ருக்கள் வழிபடும் நாளில் அகத்திக்கீரையை சமைக்கும் வழக்கமிருப்பதால், அகத்திக்கீரையை சமைத்தாலே வீட்டில் துக்க நிகழ்வு நடக்குமென மக்கள் நம்பி அகத்திக்கீரையை அன்றாட சமையலில் சேர்ப்பதில்லை.

fd4afe4aa0159b3d21b68eefb4799458

தேவையான பொருட்கள்

அகத்திக்கீரை – 1 கட்டு

 சிவப்பு மிளகாய் – 1

 சின்ன வெங்காயம் – 12

 தேங்காய்ப் பூ – 2 ஸ்பூன்

 உப்பு – சுவைக்கேற்ப..

 தாளிக்க – எண்ணெய், கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை

செய்முறை..

முதலில் சின்ன வெங்காயத்தைப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ளவும். அகத்திக் கீரையை உருவி, அரிசி களைந்த நீரில் கழுவிக் கொள்ளவும்.அதன் பின் பொடியாக அரியவும். அரிசி களைந்த நீரை அளவாக ஊற்றி வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து விடவும்.பிறகு வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டு, சிவப்பு மிளகாய் கிள்ளிப் போடவும்.அரிந்து வைத்துள்ள சின்னவெங்காயத்தைப் போட்டு, வதக்கவும். வெந்த கீரையைப் போட்டு, உப்பு சேர்த்து, கிளறவும். தேங்காய்ப் பூவையும் சேர்த்து, கிளறி இறக்கவும்.

அகத்திக் கீரையை அரைத்து உச்சந்தலையில் ஒரு மணி நேரம் வைத்திருந்து குளித்தால் உடல் உஷ்ணம் குறையும், இளநரை ஏற்படுவதையும் தடுக்கும். அகத்தி கீரையை அரைத்து ஆறாத நாள்பட்ட புண்கள் மீது தடவினால் விரைவில் ஆறிவிடும். பூவைச் சமைத்து உண்டுவர மலச்சிக்கல் குறையும். அகத்தி இலைச்சாற்றை வெறும் வயிற்றில் ஒரு கரண்டி வீதம் அருந்த, ஒரு மாதத்தில் இருமல் குறையும். அகத்தி இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து, ஒரு ஸ்பூன் சாற்றோடு, அதே அளவு தேன் கலந்து அருந்த, வயிற்றுவலி நீங்கும்.

முருங்கை வெந்து கெடுத்தது.. அகத்தி வேகாமல் கெடுத்ததுன்னு ஊர்பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க. அகத்திக்கீரையை முழுமையாக வேகவைக்காமல் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன