இளைத்தவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்கு கொள்ளு என ஒரு பழமொழியே உண்டு. கொள்ளை தினசரி உண்பதால் நம் உடலுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கின்றன. உடல் எடை குறைப்பில் ஆர்வம் உள்ளவர்கள் கொள்ளை தினசரி உட்கொண்டுவந்தால் நல்லதொரு மாற்றத்தினை காணலாம். உடல் எடைக்குறைப்பில் மட்டுமல்ல கொள்ளு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் எலும்புகள் மற்றும் நரம்புகளுக்கு அதீத சக்தியை தரக் கூடியது. இவ்வளவு நலன்கள் நிறைந்த கொள்ளைக்கொண்டு இட்லிப்பொடி, ரசம், சூப், குழம்பு, இட்லி, தோசை என செய்யலாம்.
கொள்ளு இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்…
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு – 1 கிலோ,
முளைக்கட்டிய கொள்ளு – 1/4 கிலோ,
பச்சைமிளகாய் – 4,
பெரிய வெங்காயம் – 1,
பூண்டு – 4 பல்,
இஞ்சி, உப்பு- தேவையான அளவு.
கொள்ளு இட்லி செய்முறை:
கொள்ளை சுத்தம் செய்து இரு நாள் முழுக்க ஊற வைக்க வேண்டும். மறுநாள் முளைகட்டி வைக்கவும். அடுத்தநாள் கொள்ளில் முளை வந்ததும் அதை அரைக்க எடுத்துக் கொள்ளலாம்.
பின்பு ஊற வைத்ததில் பாதி அளவு கொள்ளு, வெங்காயம், பூண்டு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து மிக்சியில் அரைத்து கொள்ள வேண்டும். இறுதியாக இட்லி மாவுடன், அரைத்த கொள்ளு கலவையை சேர்த்து கலக்கி இட்லி தட்டில் ஊற்றி வைக்கலாம். அதற்கு மேல் மீதமுள்ள கொள்ளை எடுத்து தூவி விடலாம். இட்லி வெந்தவுடன் எடுத்து பரிமாறி உண்ணுங்கள், நல்ல சுவையுடனும். ஆரோக்கியமான கொள்ளு இட்லி ரெடி.