உலகின் எந்த மூலை முடுக்கில் வாழ்ந்தாலும், உணவு என்பது அவரவர் இருப்பிடத்தில் வாழும் சூழலுக்கேற்றவாறே அமையும். மலைவாழ் மக்கள் உண்ணும் உணவான தேனும், திணையும் நகரத்தில் இருக்கும் ஆட்கள் சாப்பிட முடியாது. பீட்சாவும் பர்க்கரும் மலைவாழ் மக்கள் சாப்பிட கூடாது. காரணம் மலை ஏறி இறங்க உடலுக்கு வலு தருவதே தேனும், திணை, வரகு, சாமை மாதிரியான உணவுகள்தான். விவசாயத்தினை நம்பி வாழ்ந்த தமிழ் முன்னோர்கள் வயலில் நேரம் காலம் பாராமல் உழைக்கவேண்டும். அவர்களுக்கு இட்லி, தோசை மாதிரியான உணவுகள் தேகவலுவினை தராது. கூடவே, சீக்கிரத்தில் செமித்து பசியும் எடுக்கும். அதனால்தான் நம் முன்னோர்கள் காலையில் கேழ்வரகு களி/கூழ், மதியம் கேழ்வரகு, கம்பு, சோளத்திலான உணவுகளை சாப்பிட்டு விவசாயத்தில் சிறந்து விளங்கினர். இரவில் மட்டுமே நெல் சோறு என வழக்கப்படுத்தி வைத்திருந்தனர்.
கேழ்வரகில் கால்சியம் மிகவும் அதிகம் என்பதால், வளரும் குழந்தைகள், விளையாட்டு வீரர்கள், பெண்கள், தாய்மார்களுக்கு ஏற்றது. கேழ்வரகு, பசியைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது.
உடல் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் கொண்டது. கோடையில் அனைவருமே காலை அல்லது மதிய உணவாக கேழ்வரகிலான உணவினை எடுத்து கொள்ளலாம் வைட்டமின்கள், தாதுஉப்புகள் நிறைந்தது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். குடல் புண்களை ஆற்றும் சக்தி கொண்டது இந்த கேழ்வரகு..
இனி கேழ்வரகு களி செய்முறையை பார்க்கலாம்..
பச்சரிசி
கேழ்வரகு எனப்படும் ராகி மாவு
உப்பு
செய்முறை:
பச்சரிசியைச் சிறிது நேரம் ஊற வைக்கவும். அடிகனமான பாத்திரத்தில் பாதி அளவிற்கு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, உப்பு சேர்த்து கொதிக்கவிடவும். கொதித்ததும் ஊற வைத்த அரிசியைப் போட்டு வேகவிடவும். அரிசி வெந்ததும், கேழ்வரகு மாவைத் தூவினாற் போல் சேர்க்கவும். (கிளற வேண்டாம்).பிறகு மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். 5 நிமிடங்களுக்குப் பிறகு மூடியைத் திறந்து, மேலே வேகாமல் இருக்கும் மாவை மட்டும் லேசாகக் கிளறிவிடவும். (அடியோடு கிளறக் கூடாது). 2 நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு, மரக்கரண்டி அல்லது துடுப்பு வைத்து நன்றாகச் கிளறவும்( விருப்பமிருந்தால் நல்ல எண்ணெய் ஒரு குழிக்கரண்டி சேர்த்தும் கிளறலாம்). தண்ணீர் தடவிய கிண்ணத்தில், சூடான களியைப் போட்டு நிரப்பி கவிழ்த்து விடவும்.
பச்சரிசி சேர்க்காமல் பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து கேழ்வரகு மாவினை கொட்டி, உப்பு சேர்த்து கிளறி களியாக்கி சாப்பிடுவதும் உண்டு.
கேழ்வரகு களிக்கு வேர்க்கடலை சட்னி, கருவாட்டு குழம்பு, முருங்கைக்கீரை மசியல், வெண்டைக்காய் மசியல் என தொட்டுக்கொள்ள அருமையாய் இருக்கும். தொட்டுக்கொள்ள எதுவுமே இல்லையென்றாலும் சூடான களியில் பள்ளம் பறித்து நல்ல எண்ணெய்+வெல்லம் போட்டு மூடி தொட்டு சாப்பிட சளி, வறட்டு இருமல் போகும்..