சுத்தமில்லாத குடிநீர், அசுத்தமான சுற்றுச்சூழல், திறந்தவெளியில் மலம் கழிப்பது, கைகளை சரிவர கழுவாமல் உண்பது, உணவை திறந்து வைப்பது, செருப்பில்லாமல் தெருவில் நடமாடுவது போன்ற காரணங்களால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடலில் புழுக்கள் உருவாகும். குடலில் புழுக்கள் உருவானால் வயிற்றுக்கோளாறுகள் பலவற்றுக்கு ஆளாக நேரிடும். அதனால், சுத்தமாய் இருந்து வரும்முன் காப்பதே சிறப்பு. வந்தபின்?! மருந்து மாத்திரைகள்மட்டும் இதுக்கு போதாது. உணவிலும் மாற்றம் வேண்டும். பாவற்காய், வேப்பம்பூ, சுண்டைக்காய் மாதிரியான கசப்புகளை உணவில் சேர்த்துக்கொண்டால் வயிற்றில் இருக்கும் புழுக்கள் அடியோஒடு அழியும்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்கயம் – 10
பூண்டு – 10
சுண்டைக்காய் வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
மணத்தக்காளி வத்தல் – ஒரு கைப்பிடி அளவு
உப்பு – தேவையான அளவு
புளி – ஒரு கைப்பிடி அளவு
நல்லெண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் பொடி – சிறிது
கடுகு – சிறிதளவு
உளுந்தம் பருப்பு – சிறிது
வறுத்து அரைக்க:
காய்ந்த மிளகாய் – 5 அல்லது 6
மல்லி விதை – 2 டேபிள் ஸ்பூன்
துவரம் பருப்பு – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு – 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் – 1 டீ ஸ்பூன்
கறிவேப்பிலை – 1 கொத்து
வெந்தயம் – 10
செய்முறை: வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு மல்லி விதை,துவரம் பருப்பு, மிளகு, கறிவேப்பிலை, வெந்தயம், சீரகம் , காய்ந்த மிளகாய் இவை அனைத்தையும் நன்கு சிவக்க(பிரவுன்) வறுக்க வேண்டும். வறுத்த பொருட்கள் ஆறிய பிறகு 3 அல்லது 4 சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு மைய அரைத்து கொள்ளவும். வாணலியில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் விட்டு சுண்டக்காய் வத்தல்,மணத்தக்காளி வத்தல் இவற்றை தனித் தனியாக வறுத்து பின்பு வாணலியில் இருந்து எடுத்து தனியாக எடுத்து விடவும். அதே எண்ணெய்யில் கடுகு, உளுந்து தாளிக்கவும். பூண்டு, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அதனுடன் புளி, உப்பு சேர்த்து கரைத்து வடிகட்டி வதங்கிய பூண்டு,வெங்காயத்துடன் சேர்த்து விடவும். மஞ்சள் பொடி சேர்க்கவும். இதனுடன் அரைத்த விழுது சேர்க்கவும். கொதிக்கும் போது வறுத்து வைத்த வத்தல் வகைகளை சேர்க்கவும். கொதிக்கும் பொழுது 2 டேபிள் ஸ்பூன் நல்ல எண்ணெய் விடவும். நன்கு வற்றிய பிறகு இறக்கவும்.
சூடான சாதத்தில் நெய் விட்டு பிசைந்து சாப்பிட்டு வர குடல்புழு இறந்து மலத்தோடு வெளியேறும்.