புதுத்துணிகளை துவைத்துவிட்டே பிறந்த சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு அணிவிக்க வேண்டியதுதான். புதுத்துணிகளை அப்படியே அணிவிப்பதால் துணிகளில் இருக்கும் ஸ்டார்ச்சு, தூசி, ரசாயணப்பொருட்களால் குழந்தைகளின் இளஞ்சருமம் பாதிக்கப்படக்கூடும்.
குழந்தை துணிகளுக்காக தனியா எந்த டிடர்ஜென்ட் பவுடர்கள் எதுவும் தேவையில்லை. வீட்டில் பயன்படுத்தும் பவுடரும், சோப்புமே போதும். குழந்தைக்கான துணிகளில் எதாவது கறை படிந்துவிட்டால் அதை நீக்கியபிறகே குழந்தைகளுக்கு அணிவிக்கவேண்டும். கறையை நீக்கமுடியாவிட்டால் அந்த துணியை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
அடர்ந்த நிறத்தினாலான உடைகளை அணிவிக்கும்முன் கட்டாயம் துவைத்து, சாயம் போகின்றதா என பார்த்தப்பிறகே துணியை அணிவிக்க வேண்டும். துணிகளுக்கென பேப்ரிக் சாஃப்ட்னர் என லிக்விட் கடைகளில் கிடைக்கின்றது. அதை பயன்படுத்துவதால் குழந்தைகளின் உடை மெத்தென்று இருக்கும்.
குழந்தையின் துணிகளை துவைக்கும்போது மற்றவர்களின் துணியுடன் சேர்த்து ஊறவைத்து துவைக்க கூடாது. அதுபோல் மெஷினில் மற்றவர்களது துணியுடன் குழந்தைகளுடைய துணியையும் போட வேண்டாம். பெரியவர்களது துணியில் உள்ள கிருமிகள், குழந்தைகளின் துணியில் பரவும் என்பதால் குழந்தைகளின் துணியை தனியாக துவைப்பதே சரி.
குழந்தைகளின் துணிகளை துவைத்து முடித்ததும் டெட்டால் மாதிரியான கிருமி நாசினியை நீரில் கலந்து, அதில் ஒருமுறை துணிகளை அலசியப்பிறகே பயன்படுத்த வேண்டும். குழந்தைகளின் துணியை கட்டாயமாக வெயிலில் காயவைத்து உலர்த்த வேண்டும். நிழல் உலர்த்தலாய் உலர்த்த கூடாது. இதனால் கிருமிகள் நீங்காது.
இளஞ்சூடான நீரில் துணிகளை ஊறவைப்பது நல்லது. இதனால் கிருமிகள் நீங்கும். துவைத்து முடித்து காயவைத்த பிறகு குழந்தைகளின் துணிகளை மடித்து, சுத்தமான இடத்தில் தனியாய் மடித்து வைக்கவேண்டும். மற்றவர் துணியோடு சேர்த்து கொண்டுவருவதோ அல்லது மற்றவர் துணியோடு சேர்த்து மடித்து வைக்கவோ கூடாது.
வெயில் இல்லாத மழை, பனிக்காலங்களில் குழந்தைகளின் துணிகளை இஸ்திரி செய்து பயன்படுத்துவது சிறந்தது. வெயில் இல்லாததால் துணிகளில் இருக்கும் ஈரப்பதம் இஸ்திரி செய்வதால் நீங்கும். அழகுக்காகவும், ஆடம்பரத்துக்காகவும் கற்கள், மணிகள், பதித்த செயற்கை இழைகள் பதித்த ஆடைகளை அணிவிப்பதை கூடுமானவரை தவிர்க்கவும். பருத்தியிலான துணிகளை அணிவிப்பதே சிறந்தது. குழந்தையின் உடல்நலத்துக்கும் நல்லது. அதேப்போல் லேஸ், பிரில் வைத்த உடைகளையும் தவிர்ப்பது நல்லது. குழந்தைகளின் சின்னஞ்சிறு விரல்கள், கைகள் மாட்டி உடைய நேரலாம்.
மழலை செல்வம் கிடைப்பது தெய்வச்செயல். அதை சிறிது சிரமம் எடுத்துக்கொண்டு பேணிக்காத்தல் நலம்.