ஒவ்வொரு பருவத்துக்கு ஒவ்வொரு வியாதி வரும். ஆனால் எல்லா காலத்திலும் தொண்டை வலி வரும். தொண்டைவலிக்கு சளி பிடித்தல் மட்டும் காரணமாய் இருப்பதில்லை. தொண்டையில் ஏற்படும் தொற்றின் காரணமாக தொண்டவலி ஏற்படும். தொண்டைவலி காய்ச்சலை காட்டிலும் அதிகப்படியான எரிச்சலையும் அவஸ்தையும் உண்டாக்கும். தண்ணீரைக்கூட குடிக்கவே சிரமமாக இருக்கும். அப்படி இருக்கும்போது உணவை சாப்பிடுவதும் அவஸ்தையாகிவிடும். வளரும் குழந்தைகள்தான் அடிக்கடி காய்ச்சலையும், தொண்டையில் தொற்றையும் சந்திப்பவர்கள். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து பழைய பாட்டி வைத்தியத்தின் மூலம் சரிப்படுத்திவிட்டால் பெரிய தொந்தரவிலிருந்து தப்பிக்கலாம். தொண்டையில் வலி, தொண்டையில் புண்கள் உண்டாவதற்கு குளிர், சளி, பாக்டீரியா மற்றும் வைரல் தொற்றும் காரணமாக இருக்கலாம். சிலருக்கு குளிர்ச்சியாக எதையாவது குடித்தால் கூட உடனே தொண்டையில் அழற்சி தொற்றிக் கொள்ளும். சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாசுக்கள், தூசுக்கள் போன்றவற்றால் கூட தொண்டையில் தொற்று ஏற்பட்டு தொண்டைவலி ஏற்படும்.
தொண்டைவலிக்கான எளிய பாட்டி வைத்தியங்களில் ஒன்றுதான் தூதுவளை ரசம். தூதுவளை இருமல், சளி, உடல்வலி குணமாகும். தொடர்ந்து தூதுவளையை சாப்பிட்டு வந்தால் உடல் வலுப்பெறும். தூதுவளை, தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகியவற்றைகுணப்படுத்தும் தன்மை கொண்டது வாதத்திற்கு கைக்கண்ட மருந்து இந்த தூதுவளை. மூலிகை வகையை சேர்ந்த இந்த தூதுவளையை கூட்டு, துவையல், ரசம், சூப் என பலவகைகளில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
தேவையான பொருட்கள் :
தூதுவளை இலை – 10
தக்காளி – 4
பச்சை மிளகாய் – 2
பூண்டு – 8 பல்
கறிவேப்பிலை, கொத்தமல்லி- சிறிதளவு
ரசப் பொடி – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
பருப்பு வேகவைத்த தெளிவான நீர் – 1 கப்
நெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
தக்காளி, கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். தூதுவளை இலையைச் சுத்தம் செய்து, நெய்யில் வதக்கி அத்துடன் பூண்டைச் சேர்த்து மிக்ஸியில் நீர் விடாமல் பொடித்துக் கொள்ளவும். பருப்பு நீரில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து அதில் பொடித்த தூதுவளை இலை, பச்சை மிளகாய், ரசப்பொடி, மஞ்சள்தூள், தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். ரசம் நுரைத்து வரும்பொழுது இறக்கி வைக்கவும். கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதம் அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து ரசத்தில் கொட்டி கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்.
உடல் ஆரோக்கியத்தை காக்கும், தொண்டைக்கு இதமான, தூதுவளை பருப்பு ரசம் தயார்.