மாறிவரும் உணவு பழக்க வழக்கத்தால் பல்வேறு நோய் நொடிகளும் தவிர்க்க இயலாத ஒன்றாக மாறி வருகிறது. இள வயதிலேயே பலரும் பல்வேறு விதமான உடல்நல உபாதைகளால் அவதிப்பட்டு வருகிறார்கள். அப்படி இன்று இளவயதிலேயே வந்து அதிக அளவு பிரச்சனைகள் உண்டு பண்ண கூடிய ஒரு வியாதி தான் சர்க்கரை நோய்.
இந்த சர்க்கரை நோயாளிகளுக்கு மருந்து மாத்திரையை விட உணவு கட்டுப்பாடு என்பது மிக முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது. இந்த சர்க்கரை நோயாளிகள் உணவில் கார்போஹைட்ரேட், இனிப்பு வகைகள் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. ஆனால் உடலுக்கு நல்ல கொழுப்பை தரக்கூடிய நெய்யை சேர்க்கலாமா? என்பது பலருக்கும் கேள்விக்குறியாக உள்ளது.
நெய்யில் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன. மேலும் நெய் லாக்டோஸ் இல்லாதது. ஜீரணிக்க மிக எளிமையானது. நெய் சேர்ப்பதால் உணவின் கிளைசீமிக் குறியீட்டை குறைக்கிறது என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் சர்க்கரை நோயாளிகளின் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்த இது உதவும். இவ்வாறான சூழலில் சர்க்கரை நோயாளிகள் நெய் சாப்பிடலாமா என்பதற்கான பதில் ஆம் என்பதே ஆகும்.
ஆனால் அவர்கள் நெய் பயன்பாட்டில் கட்டுப்பாட்டை பின்பற்ற வேண்டும். பருப்பு வகைகள் அல்லது அரிசி உணவில் ஒரு ஸ்பூனிற்கு மேல் நெய் சேர்க்கவே கூடாது. கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள எந்த உணவிலும் ஒரு டீஸ்பூன் நெய்யை மட்டும் சேர்த்துக் கொள்ளலாம் மேலும் சுத்தமான நெய்யை மட்டும் பயன்படுத்த முயற்சி செய்வது நல்லது முடிந்தால் வீட்டிலேயே நெய் தயார் செய்து பயன்படுத்தலாம்.