ஏலக்காய் மருத்துவ பயன்கள்!

By Staff

Published:

ஏலக்காய் பற்றி எல்லோருக்கும் நிச்சயம் தெரியும். அதை பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது. நாம் தினமும் குடிக்கும் காபி, டீயில் இந்த ஏலக்காய் பொடியை சிறிதளவு கலந்தாலும் சும்மா நச்சுன்னு இருக்கும். அந்த காபி, டீ. இந்த ஏலக்காய் பற்றி சற்று விரிவாக காண்போம்.

9e355fcbeadebab3a72698232dffd857

Elettaria Cardamomum என்ற தாவரவியல் பெயரில் அழைக்கப்படும் ஏலக்காய் சமஸ்கிருதத்தில் “ஏலா” என்று அழைக்கப்படுகிறது. முதிர்ந்த ஏலக்காய்களின் உள்ளிருக்கும் விதைகள் (ஏலரிசி) மருத்துவ பயன்கள் கொண்டவை.

மருத்துவ பயன்கள்:

அஜீரணம்:

சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகவில்லை என்றால் மருந்து, மாத்திரை தேட வேண்டாம். ஏலரிசியுடன், ஓமம், சீரகம் ஆகியவற்றை சம அளவில் எடுத்துக்கொண்டு லேசாக வறுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதை பொடி செய்து, அதில் ஒரு தேக்கரண்டி அளவு உட்கொள்ள வேண்டும். இவ்வாறு உட்கொண்டால் அஜீரணக் கோளாறு விலகிவிடும்.

வயிற்றுவலி:

அவ்வப்போது வந்து எட்டிப்பார்க்கும் வயிற்றுவலிக்கும் ஏலக்காய் சிறந்த மருந்து. இதற்காக, ஏலரிசியுடன் சீரகம், சுக்கு, கிராம்பு ஆகியவற்றை சம அளவில் எடுத்து பொடித்துக் கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை தேனில் கலந்து தினமும் 3 வேளை சாப்பிட்டு வர வேண்டும். இவ்வாறு செய்தால் வயிற்றுவலி குணமாகும்.

கர்ப்பக்கால பிரச்சினை:

கர்ப்பிணி பெண்களுக்கு, அந்த கர்ப்பக் காலத்தில் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவை ஏற்படுவது உண்டு.

இவற்றை போக்க, ஏலக்காயின் மேல் தோலை உரித்து, உள்ளிருக்கும் ஏலரிசியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

அந்த ஏலரிசியை காய வைத்து பொடி செய்து கொள்ள வேண்டும். 2 கிராம் அளவு பொடியை, தேவையான அளவு எலுமிச்சம்பழச்சாற்றில் குழைத்து, உணவு உட்கொண்ட பின்பு சாப்பிட்டு வரவேண்டும். தொடர்ச்சியாக ஒருசில நாட்கள் இப்படி உட்கொண்டு வந்தால் கர்ப்பக் காலத்தில் ஏற்படும் அஜீரணம், குமட்டல், வாந்தி போன்றவற்றை தடுக்கலாம்.

பிற பயன்கள்:

தலை குளிர்ச்சிக்கான தைலம் தயாரிக்கும் சிற்றாமுட்டி வேர்ப்பொடியுடன் ஏலக்காயும், நல்லெண்ணெயும் மற்றும் சில மூலிகைகளும் பயன்படுத்தப்படுகின்றன. கிரேக்க நாட்டில் கி.மு. 4-ம் நூற்றாண்டு முதலே ஏலக்காயானது நறுமணப் பொருளாகவும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டது.

இந்திய மருத்துவத்தில் ஆஸ்துமா, மூச்சுக்குழல், அழற்சி, சிறுநீரகக் கல், நரம்பு தளர்ச்சி மற்றும் பலவீனம் போக்க ஏலக்காய் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

சீன மருத்துவத்தில் சிறுநீர்ப்போக்கு கட்டுப்பாடு இன்மையை போக்கவும், வலுவேற்றியாகவும் பயன்படுகிறது. வாய் துர்நாற்றம் போக்கவும் ஏலக்காய் சிறந்த மருந்து.

உணவு பொருட்களுடன் ஏலக்காயை சேர்த்தால் அவை மிகுந்த வாசனை கொண்டவையாகவும், சுவை மிகுதியாகவும் மாறும்.

குளிர் பிரதேசங்களில் உணவு பொருட்களின் வாசனைக்காக அதிக அளவில் ஏலக்காயை பயன்படுத்துகிறார்கள். இதனால், இந்திய ஏலக்காய்களுக்கு பல நாடுகளில் நல்ல மவுசு உள்ளது.

மேலும் படிக்க: இஞ்சி டீ நன்மைகள்.

Leave a Comment